சென்னையில் டீசல் தட்டுப்பாட்டால் அவதியில் வாகன ஓட்டிகள்!!

சென்னையில் உள்ள பல்வேறு பெட்ரோல் பங்குகளில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் பல பெட்ரோல் பங்குகளில் ‘டீசல் இல்லை’ என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் திடீர் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. 

அந்த வகையில், சென்னையில் கடந்த 3 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், சென்னையில் தொடர்ந்து 2 ஆவது நாளாக டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னையில் உள்ள ஒரு சில பெட்ரோல் பங்குகளில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த பெட்ரோல் பங்க்குகளில் ‘டீசல் இல்லை’ என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. டீசல் போடுவதற்காக பெட்ரோல் பங்குகளுக்கு வரும் வாகன ஓட்டிகள் ‘டீசல் இல்லை’ என்ற அறிவிப்பு பலகையை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். 

இவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதுகுறித்து ஒரு எண்ணெய் நிறுவன அதிகாரி கூறுகையில், ‘கச்சா எண்ணெய் வரத்து குறைவு, வினியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் டீசலுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தற்காலிகமானது தான். விரைவில் இந்த பிரச்சினை தீர்க்கப்படும்.’ என்று கூறினார்.

பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் ஆகியவை மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான இன்றியமையாத பொருட்களாகும். இவற்றில் ஏற்படும் விலை மாற்றங்கள் மக்களது தினசரி வாழ்வை வெகுவாக பாதிக்கின்றன. மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப வாகனங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இதனால் உலகம் முழ்வதும் சமீப காலங்களில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. அதற்கு சென்னையும் விதிவிலக்கல்ல. தமிழகத்தில் சென்னையில் மட்டுமல்லாமல், இன்னும் பல நகரங்களிலும் இந்த தட்டுப்பாடு இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.