சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி(Munishwar Nath Bhandari) வரும் 12-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி பதவி வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ள திரு எம்.துரைசாமி, கடந்த 1960-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி பிறந்தார். இவர் இளநிலை வணிகவியல்(B.Com) பட்டப்படிப்பை முடித்து, சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்று 1987-ம் அன்று தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் குழுமத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார்.
சட்டீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எசு.வெங்கடாசலமூர்த்தியிடம் ஜூனியராக பணிபுரிந்தவர் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1997 முதல் 2000 வரை மத்திய அரசின் நிலை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
2009-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். பின்னர் 2011 ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.