சேலம்: சேலம் அருகே தண்டவாளத்தில் கல், இரும்பு ராடுகளை மர்மநபர்கள் வைத்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலை கவிழ்க்க இவ்வாறு வைக்கப்பட்டதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள தின்னப்பட்டியில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இவ்வழியாக, கேரளா, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வடமாநிலங்களுக்கு ரயில்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று இரவு மர்மநபர்கள் தின்னப்பட்டி ரயில் நிலையம் அருகே ரயில் தடம் மாற்றியின் இடையே கற்களை வைத்துள்ளனர்.
தொடர்ந்து மற்றொரு தண்டவாளத்தில் இரும்பு ராடுகளை வைத்து சென்றுள்ளனர். இதை அவ்வழியாக வந்த ஒருவர் பார்த்து, ரயில் நிலையத்திலிருந்த பாயிண்ட் மேன் அருணிடம் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அங்கு சென்ற அருண் கற்களையும் இரும்பு ராடையும் அப்புறப்படுத்தி உள்ளார். கற்கள் மற்றும் இரும்பு ராடு வைத்த சமயத்தில் ரயில் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில்களை தடமாற்றம் செய்யும் யார்டு பகுதி இடையே கற்கள் வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் மற்றும் சேலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.