சென்னை: ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.
தமிழக அரசின் ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு’ 393 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சென்னையில் நேற்றுநடைபெற்ற விழாவில், அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஆசிரியர்களுக்கு, ராதாகிருஷ்ணன் விருது, ரூ.10 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினர்.
விழாவில், பள்ளிக்கல்வித் துறை ஆணையர் க.நந்தகுமார் வரவேற்றார். முதன்மைச் செயலர் காகர்லா உஷா விளக்க உரையாற்றினார்.
தலைமை வகித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, “ஆசிரியர்கள் இளமையில் கற்றுத்தரும் விஷயங்கள்தான், ஒவ்வொரு மனிதரையும், அவரதுவாழ்நாள் முழுவதும் நேர்த்தியான மனிதராக வாழ வைக்கிறது. தொடக்கக் கல்வி, ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் உறுதுணையாக உள்ளது. நண்பர், பெற்றோர், வழிகாட்டி, இறைவன் என அனைவரையும் ஆசிரியர் வடிவில்தான் பார்க்க முடியும்.
தனது மாணவர்கள் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டுமென எண்ணுவோர் ஆசிரியர்கள். இந்தஎண்ணம் நண்பர்கள் உள்படயாருக்கும் வராது. ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம், தமிழாசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான பதவி உயர்வு ஆகியவை முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில்தான் வழங்கப்பட்டன. மேலும், திமுக ஆட்சியில்தான் அரசுப் பள்ளிகளின் தரமும் உயர்த்தப்பட்டது” என்றார்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசும்போது, “மக்களை நல்வழிப்படுத்தும் கடமை ஆசிரியர்களுக்குத்தான் உண்டு. தமிழகத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதற்காக முதல்வர் ஸ்டாலின் பாடுபட்டு வருகிறார். அவரது கரத்தை வலுப்படுத்தும் வகையில், ஆசிரியர்கள் இன்னும் கடுமையாக உழைத்து, நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும்” என்றார்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் ஐ.லியோனி பேசும்போது, “ஆசிரியர்களுக்கு அலுவலக வேலை அதிகம் கொடுப்பதால், மாணவர்களுக்கு சரிவர பாடம் கற்றுத்தர இயலவில்லை. எனவே, ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்க வேண்டும். அதேபோல, பள்ளிக்கல்வித் துறையில் மீண்டும்இயக்குநர் பதவியைக் கொண்டுவர வேண்டும்” என்றார்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது, “நல்லாசிரியர் விருது என்றதும், ஆசிரியர்கள் மட்டும்தான் நல்லாசிரியர்களா, மற்றவர்கள் கிடையாதா என்று கேட்டு, இந்த விருதுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்று பெயர் மாற்றியவர் கருணாநிதி. ஆசிரியர்களை ஏங்கவிட்டால், வகுப்பறைகள் தேங்கும்என்றார் அண்ணா. எனவே, லியோனி தெரிவித்த கோரிக்கை கள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
ஆசிரியர்களுக்கு உரிய சுதந்திரம் கொடுத்தால், மாணவர்களை சிறப்பாக மாற்றிக் காட்டுவார்கள். முன்பெல்லாம் மாணவர்களை அடிக்க ஆசிரியர்களுக்கு உரிமை இருந்தது. தற்போது, தவறு செய்யும் மாணவர்களைத் திட்டினால்கூட, சமூக வலைதளங்களில் பல்வேறுகருத்துகளைக் கூறத் தொடங்கிவிடுகின்றனர்.
தங்களிடம் கல்வி பயிலும் பிள்ளைகள் உயர்ந்த இடத்துக்குச் செல்ல வேண்டுமெனக் கருதுவோர் ஆசிரியர்கள். அவர்களது கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்” என்றார்.
விழாவில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனஇயக்குநர் ந.லதா, மாநில வயது வந்தோர் மற்றும் பள்ளிசாராக் கல்வி இயக்குநர் பெ.குப்புசாமி, தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, இல்லம் தேடிக் கல்வித் திட்ட சிறப்புப் பணி அலுவலர் க.இளம்பகவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்பெல்லாம் மாணவர்களை அடிக்க ஆசிரியர்களுக்கு உரிமை இருந்தது. தற்போது, தவறு செய்யும் மாணவர்களைத் திட்டினால்கூட, சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளைக் கூறத் தொடங்கிவிடுகின்றனர்.