டெல்லி: புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் பணம் பெற்றது உண்மை என்று கூறி பாரதிய ஜனதா வெளியிட்டிருக்கும் வீடியோக்களால் டெல்லியில் பரபரப்பு நிலவுகிறது. டெல்லியில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 31 இடங்களில் சிபிஐ கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி சோதனை நடத்தியது. இதில் முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாக கூறிய சிபிஐ, மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றது உண்மை என்று கூறி, சில காணொளிகளை பாரதிய ஜனதா வெளியிட்டிருக்கிறது. ‘ஸ்டிங்’ ஆபரேஷன் என்ற பெயரில் 2 வீடியோக்களை பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் சிபிஐ-ன் வழக்கில் 12வது குற்றவாளியான சன்னி வர்மா என்பவரின் தந்தை உள்வந்தர் மார்வா பேசும் காட்சிகள் ரகசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. கருப்பு பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு முறைகேடாக மதுபான விற்பனை உரிமம் வழங்கப்பட்டது குறித்தும், அதில் டெல்லி முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் கிடைத்துள்ள கமிஷன் குறித்தும் மார்வா வீடியோவில் பேசியிருப்பதாக பாரதிய ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.
எனவே மதுபான கொள்கை முறைகேட்டில் இருந்து துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தப்பிக்க வழியில்லை என்றும் அந்த கட்சி தெரிவித்திருக்கிறது. நிலையில் பாஜகவின் குற்றசாட்டை மறுத்துள்ள துணை முதல்வர் சோசோடியா பாஜக வெளியிருப்பது நகைப்பிற்குரிய காணொளி என்றார். தன்னிடமும் இதுபோன்ற பல்வேறு ஸ்டிங் வீடியோக்கள் இருப்பதாக தெரிவித்திருக்கும் சோசோடியா அவற்றை வெளியிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.