ஒரத்தநாடு அருகே தங்கப் புதையல் எடுத்துத் தருவதாக தெரிவித்து பக்தர்களிடம் பல லட்சம் மோசடி செய்த பூசாரி. இந்த மோசடி தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள ஒக்கநாடு கீழையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மதுக்கூர் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் பூசாரியாக இருந்து வந்தார்.
பூசாரி ரமேஷ்குமார், இந்த கோவில் வளாகத்திலேயே தங்கி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறி வந்துள்ளார். இந்நிலையில் அங்கு சாமிதரிசனம் செய்ய வந்த பெண்களிடம் தங்கப்புதையல், இருக்கும் அந்த இடத்திலேயே தோண்டி எடுத்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
இதனடிப்படையில், பூசாரி ரமேஷ்குமார் சென்னையை சேர்ந்த தேவி என்ற பெண்ணிடம் தங்க புதையல் எடுத்து தருவதாக கூறி ரூ. 23 லட்சம் ரூபாயை வாங்கியதாகவும் அதேபோல் பாப்பாநாடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணிடமும் புதையல் எடுத்து தருவதாக கூறிய ஐந்து லட்ச ரூபாய் பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் பல மாதங்களாக ஆகியும் தங்கப் புதையல் கிடைக்காததால், தேவி அந்தக் கோவில் வளாகத்தில் அமர்ந்து, தனது இருபத்தி மூன்று லட்சம் ரூபாய் பணத்தை தருமாறு பூசாரி ரமேஷ் குமாரிடம் தகராறு செய்துள்ளார். இந்த சம்பவம் அறிந்த பல பெண்கள் பல ஊர்களில் இருந்து வர தொடங்கினர்.
மேலும் இச்சம்பவம் குறித்து, தேவி ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இது பற்றி ஒரத்தநாடு டிஎஸ்பி பிரசன்னா தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.