தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த பாஜக திட்டம்; எச்சரிக்கும் கி.வீரமணி

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிட கழக தலைவர் கி வீரமணி தலைமையில் திராவிடர் கழக தலைமை கூட்டம் நடைபெற்றது. இதில் 15 தீர்மானங்கள் உள்பட சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, ” தந்தை பெரியார் 144-வது ஆண்டு பிறந்தநாள் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று  சிறப்பாக கொண்டாடப்படுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பெரும் கொள்கை பிரச்சார விழாவாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளோம். 

பெரம்பலூர் மாவட்டம் சிறுகனூரில் ‘பெரியார் உலகம்’ ஒன்பது ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. அங்கு சுமார் 150 அடி உயர பெரியார் சிலையை அமைப்பதற்கான பணியை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டில் தொடங்கி வைக்க உள்ளார். ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட மதவாதிகளை அடையாளம் கண்டு அவற்றிற்கு எதிராக செயல்படக்கூடிய சிறந்த தலைவராக காங்கிரஸ் கட்சி தலைவரான ராகுல் காந்தி இருக்கிறார். திராவிடர் கழக சித்தாந்தம் பாஜக சித்தாந்தம் நேர் எதிர் சித்தாந்தம். திராவிடர் கழகத்திற்கு எதிராக செயல்படக்கூடிய துணிவு பாஜகவிற்கு இல்லை.

 அவர்கள் அரசியல் ரீதியாக திராவிட மாடல் ஆட்சியை தாக்கி அரசியல் செய்து வருகின்றனர். பாஜக தலைவரான அண்ணாமலை அடித்தால் திருப்பி அடிப்பேன் என ஊடகவியலாளரிடம் அளித்த பேட்டியின் மூலம் அவரது தரத்தை அறிந்து கொள்ள முடிகிறது. அவர் தலைவர் பகுதிக்கு தகுதியானவரா?. சட்டத்தை கையில் எடுத்து தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம்  பெற வேண்டும் என அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். 

அவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து தமிழக அரசுக்கும் அமைச்சர்களுக்கும் தெரியும். ஆதி திராவிடர்களுக்கு பொருளாதாரத்தில் ஏற்றம் காணக்கூடிய வகையில் இருக்கக்கூடிய சலுகைகளை பறிப்பதற்கான சூழ்ச்சிகள் அன்று தொடங்கி இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை பாதுகாக்க சட்டரீதியாக தொடர்ந்து செயல்பட வேண்டும்” என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.