கோல்பாரா: அசாமில் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக அறியப்பட்ட மதரஸாவையும், அதன் அருகே உள்ள வீடு ஒன்றையும் உள்ளூர்வாசிகளே சேர்ந்து இடித்துத் தரைமட்டமாக்கினர். இடிக்கப்பட்ட வீட்டில் வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் தங்கியிருந்துள்ளனர். அவர்களுக்கு தீவிரவாத தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டதாலேயே மதரஸா இடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தொடரும் மதரஸா இடிப்புகள்: ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை அசாமில் மூன்று மாவட்டங்களில் இதேபோல் தீவிரவாதிகள் தொடர்புடையதாக அறியப்பட்ட மதரஸாக்கள் இடிக்கப்பட்டன. மோரிகான் மாவட்டத்தில் உள்ள மோயிராபரி மதரஸா, பார்பேட்டாவில் உள்ள மதரஸா மற்றும் பொங்கைங்கான் மாவட்டத்தில் உள்ள மதரஸா ஆகியன இடிக்கப்பட்டன. தற்போது மேலும் ஒரு மதரஸா இடிக்கப்பட்டுள்ளது.
இந்த மதரஸா அசாம் மாநிலம் கோல்பாரா நகரில் உள்ளது. இதில், வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் கடந்த 2021 முதல் ஆசிரியர்களாகப் பணியாற்றியுள்ளனர். ஆனால், அவர்கள் இருவருக்கும் அல் குவைதா அமைப்புடனும் அன்சருல்லா பங்களா குழு என்ற தடை செய்யப்பட்ட அமைப்புடனும் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில்தான் அரசாங்கம் இதனைக் கண்டறிந்தது. இந்தத் தகவல் உள்ளூர்வாசிகளுக்குத் தெரியவர, அரசாங்கத்துடன் இணைந்து உள்ளூர்வாசிகளும் மதரஸாவை இடித்தனர்.
முன்னதாக, கடந்த ஞாயிரன்று, அசாம் மாநில போலீஸ் டிஜிபி பாஸ்கர் ஜோதி மஹந்தா மாநிலத்தின் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் முக்கியப் பிரமுகர்களை சந்தித்து மாநிலத்தில் மறைமுகமாக இயங்கும் தீவிரவாத அமைப்புகளை ஒழிப்பது பற்றி ஆலோசித்தார். அப்போது அனைத்து மதரஸாக்களும் தங்களின் விதிமுறைகள், பாடத்திட்டங்களை இணையத்தில் அப்லோட் செய்யுமாறு வலியுறுத்தினார்.
அசாம் மாநிலத்தில், கடந்த மார்ச் மாதம் முதல் வங்கதேசத்தவர் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.