சாத்தான்குளம்: வாழும் காமராஜர் விருதை வாங்குவதற்கு சகாயம் ஐஏஎஸ் மறுப்பு தெரிவித்தார். அதற்கு பதிலாக கருப்பட்டியை வாங்கி வந்த சம்பவம் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தில் பெருந்தலைவர் காமராஜர் மக்கள் பேரவை சார்பில் முதல் ஆண்டு தொடக்க விழா, வாழும் காமராஜர் விருது வழங்கும் விழா மற்றும் காமராஜர் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் மக்கள் பாதை பேரியக்கத் தலைவருமான சகாயம் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வைத்து சகாயத்திற்கு வாழும் காமராஜர் விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விருதுகள் அறிவிப்பு
இதையடுத்து விருதுகளுக்கான அறிவிப்பு வெளியானது. அதில் வாழும் காமராஜர் என்ற விருதிற்கு சகாயத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. இதனால் ஷாக்கான சகாயம், பெருந்தலைவர் காமராஜருடன் என்னை ஒப்பிட்டு விருது வழங்க வேண்டாம்.
யாருமில்லை
அவருக்கு இணை யாருமில்லை என சகாயம் கூறினார். இதையடுத்து சால்வை போர்த்தியதையும் ஏற்க மறுத்தார். இதையடுத்து அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஓடோடி போய் கருப்பட்டியை வாங்கி வந்து புத்தகங்களையும் கருப்படடியையும் சகாயத்திற்கு கொடுத்து கவுரவித்தனர்.
விருது எப்போது கிடைக்கும்
எப்போது விருது கிடைக்கும் என சிலர் காத்திருக்கும் நிலையில் தேடி வந்த விருதையும் சகாயம் ஏற்க மறுத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என மக்களிடம் நன்மதிப்பை பெற்ற சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் என ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவர் பின்னால் அணிவகுத்தனர்.
ரஜினி
ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் சகாயம் இணைவதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் 7 ஆண்டுகளாக அதிகாரமே இல்லாத பணியில் இருந்ததால் சகாயம் வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். மதுரை கிரானைட் குவாரி குறித்து சகாயம் விசாரித்த போது அங்கு நரபலி கொடுப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் அந்த சுடுகாட்டிற்கு சென்றார்.
சுடுகாட்டில் படுத்திருந்த சகாயம்
அதிகாரிகள் சிலர் ஒத்துழைப்பு அளிக்காததால் அவரால் சடலங்களை தோண்டி பார்க்க முடியவில்லை. இரவு நெருங்கியது அந்த இடத்தை விட்டு போய்விட்டால் ஆதாரத்தை அழிக்க சடலங்களை தோண்டி எடுத்துவிடுவார்கள் என நினைத்த சகாயம் அந்த இரவை சுடுகாட்டிலேயே கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.