கொரோனா தொற்றுக்கு எதிராக இந்தியா மற்றொரு வெற்றியைப் பெற்றுள்ளது. நாட்டின் முதல் நாசி தடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று தனது ட்வீட்டர் மூலம் “பாரத் பயோடெக்கின் கோவிட்-19 மறுசீரமைப்பு நாசி தடுப்பூசிக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (டிசிஜிஐ) ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். கோவிட்-19 வைரஸிற்கான இந்தியாவின் முதல் நாசி தடுப்பூசி இதுவாகும்.
இது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் இது ஒரு பெரும் ஊக்கம்! பாரத் பயோடெக்கின் ChAd36-SARS-CoV-S கோவிட்-19 (சிம்பன்சி அடினோவைரஸ் வெக்டார்டு) மறுசீரமைப்பு நாசி தடுப்பூசி மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை தொற்றுநோய்க்கு எதிரான நமது கூட்டு முயற்சிக்கு மேலும் வலுசேர்த்துள்ளது என்று தனது அடுத்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முன்னேறி வருகிறது எனக்கூறியுள்ளார்.
This step will further strengthen our collective fight against the pandemic.
India has harnessed its science, R&D, and human resources in the fight against COVID-19 under PM @NarendraModi Ji’s leadership.
With the science-driven approach & Sabka Prayas, we will defeat COVID-19.
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) September 6, 2022
நாசி தடுப்பூசி எவ்வாறு வேலை செய்கிறது?
நாசி ஸ்ப்ரே தடுப்பூசி மூக்கு வழியாக கொடுக்கப்படுகிறது. இது மூக்கின் உள் பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. கொரோனா உட்பட காற்றில் பரவும் பெரும்பாலான நோய்களின் வேர் முக்கியமாக மூக்கு என்பதால் இது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மேலும் மூக்கின் உள் பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது அத்தகைய நோய்களைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நாசி தடுப்பூசியின் பயன்கள்:
ஊசியிலிருந்து விடுதலை கிடைக்கும்.
சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி தேவையில்லை.
குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடுவது எளிதாக இருக்கும்
செலவு குறைவு என்பதால், உலகெங்கிலும் விநியோகம் செய்யலாம்.
நாசி தடுப்பூசி – பக்க விளைவுகள் இல்லை:
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட நிறுவனம் சுமார் 4,000 தன்னார்வலர்களுடன் நாசி தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை முடித்தது. இதுவரை எந்த பக்க விளைவுகளும் அல்லது பாதகமான எதிர்வினையும் இல்லை என்று நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.