புதுடெல்லி: கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்தலாம் என்று தீர்ப்பளித்தார். அதன்படி, பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டு, இபிஎஸ் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்ற உத்தரவுபடி விசாரித்த தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழு செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று கூறி, தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி ஓபிஎஸ் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “பொதுக்குழு நடத்த அனுமதியளித்தது தவறான முடிவு. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான்தான் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த முடியும். இந்த விவகாரத்தில் அதிமுகவின் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளன.
மேலும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அதிமுகவின் சட்ட விதிகளுக்கு எதிரானது. எனவே, கட்சியின் சட்ட விதிகளுக்கு எதிராக நடந்துள்ள பொதுக்குழுக் கூட்டத்தையும், அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் அங்கீகரித்துள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.
முன்னதாக, இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்டபிறகே, ஓபிஎஸ்ஸின் மேல்முறையீட்டு மனு மீது முடிவு எடுக்கக் கோரி இபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.