நாடு முழுவதும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வின் மாதிரி விடைகள் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதேபோல விடைத்தாள்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதில் தனது விடைத்தாள் மாறி விட்டதாக கூறி சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த மாணவி பவமிர்த்தினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்வில் 720க்கு 600க்கும் மேல் மதிப்பெண்கள் பெறும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில் 132 மதிப்பெண்கள் பெற்றதற்கான விடைத்தாள் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தேர்வில் 13 கேள்விகளுக்கு மட்டும் தான் விடையளிக்காத நிலையில், தனக்கு அனுப்பப்பட்ட விடைத்தாளில் 60 கேள்விகள் விடையளிக்கப்படாமல் விடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். விடைத்தாளின் இடது புறம் இடம்பெற்றிருந்த தனது சுய விவரங்கள் அடங்கிய பகுதி வேறு மாணவி விடைத்தாளுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என மாணவி தனது மனுவில் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
விடைத்தாளில் உள்ள கைரேகையை சரி பார்த்தால் தனது விடைத்தாள் எது என கண்டுபிடிக்க முடியும் எனவும், தனது விடைத்தாளை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மாணவி கோரியுள்ளார். மேலும், தன்னை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கவும், ஒரு இடத்தை காலியாக வைத்திருக்கும்படி உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விடைத்தாள் மாறியுள்ளது, அவருக்கு அனுப்பியது மனுதாரரின் விடைத்தாள் கிடையாது, உண்மையான விடைத்தாளை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். தேசிய தேர்வு முகமை சார்ந்த வழக்கறிஞர் நீட் தேர்வு முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களுக்கு கேட்ட நீதிபதி மாணவியின் உண்மையான விடைத்தாளை வரும் 13 ஆம் தேதி சமர்ப்பிக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தார்.