பல லட்சம் ஹவாலா பணத்தை ஏடிஎம்மில் டெபாசிட் செய்த இளைஞர்: சுற்றிவளைத்து பிடித்த போலீஸார்

சென்னை: வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் தினமும் லட்சக்கணக்கில் ஹவாலா பணம் செலுத்திய இளைஞர், போலீஸாரிடம் பிடிபட்டுள்ளார். அவரது பின்னணியில் உள்ளவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் டாக்டர் அழகப்பா சாலையில் உள்ள வங்கி ஏடிஎம் மைய இயந்திரத்தில் பணம் செலுத்தும் வசதியும் உள்ளது.

இந்த ஏடிஎம் மூலம் கடந்த ஒரு மாதமாக தினமும் காலை 6 மணி அளவில் ஒரே வங்கிக் கணக்குக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணம் செலுத்தப்பட்டு வந்துள்ளது. இதை மும்பையில் உள்ள வங்கியின் அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதையடுத்து, ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், ஒரே நபர் தினமும் பணம் செலுத்துவது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

வழக்கம்போல நேற்றும் அதே நேரத்துக்கு அந்த நபர் வரக்கூடும் என்பதால், காவல் ஆய்வாளர் வனிதா தலைமையிலான போலீஸார் நேற்று அதிகாலை 5 மணிக்கே அங்கு சென்று,ஏடிஎம் மையத்தை சுற்றிலும் ஆங்காங்கே சாதாரண உடையில் மறைந்திருந்து தீவிரமாக கண்காணித்தபடி இருந்தனர்.

எதிர்பார்த்தபடி, அந்த நபர் காலை 6 மணி அளவில் அங்கு வந்தார். ரூ.2.10 லட்சம் பணத்தை ஏடிஎம்மில் செலுத்திவிட்டு வெளியே வந்த அவரை, போலீஸார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவரது பையில் ரூ.6 லட்சம் இருப்பதையும் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் தெரியவந்த தகவல்கள் குறித்து போலீஸார் கூறியதாவது:

பிடிபட்ட இளைஞரின் பெயர் சாயின்ஷா (29). சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர். பைக் டாக்ஸி ஓட்டுநராக வேலை செய்கிறார்.

ஒரு லட்சத்துக்கு ரூ.100 கமிஷன்

இவருக்கு சென்னை பாரிமுனையை சேர்ந்த பர்வேஸ் என்பவர் அறிமுகமாகியுள்ளார். ஏடிஎம் மூலமாக தான் கூறும் வங்கிக் கணக்குக்கு பணம் செலுத்தினால், ரூ.1 லட்சத்துக்கு ரூ.100 கமிஷன் தருவதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பர்வேஸ் அவ்வப்போது லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்துள்ளார். அதை பெற்றுக்கொள்ளும் சாயின்ஷா, கீழ்ப்பாக்கம், பெரியமேடு, ஷெனாய் நகர், அண்ணா நகர், திருவல்லிக்கேணி என கூரியர் டெலிவரி செய்வது போல, சென்னையில் ஒவ்வொரு பகுதியாக சென்று பல்வேறு ஏடிஎம்களில் அந்த பணத்தை செலுத்தி வந்துள்ளார்.

இதேபோல கடந்த ஓராண்டாக ரூ.1 கோடிக்கு மேல் செலுத்தியுள்ளார். இது கணக்கில் காட்டாத ஹவாலா பணம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமும் கிண்டி பகுதிக்கு சாயின்ஷாவை வரவழைத்து பணத்தை பர்வேஸ் கொடுத்துள்ளார். பர்வேஸ் என்பவர் யார், அவர் கிண்டி பகுதியை சேர்ந்தவரா, அவருக்கு பணம் கொடுத்தது யார், எந்தெந்த வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பியுள்ளனர், எதற்காக பணம் அனுப்பப்பட்டது என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். தனிப்படை அமைத்து பர்வேஸையும், அவரது கூட்டாளிகளையும் தேடி வருகிறோம்.

இவ்வாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், பிடிபட்ட இளைஞர் சாயின்ஷாவை பணத்துடன் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் போலீஸார் ஒப்படைத்துள்ளனர். அவரிடம் வருமான வரித் துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.