பழைய பைலை தூசி தட்டி வழங்கப்பட்ட திரைப்பட விருதுகள்: தாமதமாக அளிப்பதால் யாருக்கு லாபம்?

சினிமா கலைஞர்களுக்கு ரசிகர்களின் கைத்தட்டல்களும், விமர்சகர்களின் பாராட்டுக்களும் தான், விருதுகளாகவும், அங்கீகாரமாகவும் தோன்றும். எந்த துறையாக இருந்தாலும் சரியான நேரத்தில் பாராட்டுகள் கிடைக்க வேண்டும். அப்போது தான் திறமைகளை மேலும் மெருகேற்ற முடியும்.

அனைத்து மாநிலத்திலும் திரைப்படத் துறைக்கு விருதுகள் வழங்கப்படுகிறன்றன. தமிழகத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்பட விருதுகள் உரிய காலத்தில் வழங்கப்படவில்லை.

2009ம் ஆண்டு முதல் 2014 வரை தமிழகத்தில் வெளியான படங்களுக்கும், அதன் கலைஞர்களுக்குமான அரசு திரைப்பட விருதுகள் செப்.,4ம் தேதி சென்னையில் வழங்கப்பட்டன. அன்று திரைத்துறை மட்டுமல்லாது சின்னத்திரை, தமிழக அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்கள் என 314 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

பல ஆண்டுகளாக வழங்கப்படாத விருதுகளை தற்போதாவது வழங்கினார்களே என கலைஞர்கள் ஒருபுறம் மகிழ்ச்சி அடைந்தாலும். விருது பெற்ற சிலர் இப்போது உயிரோடே இல்லை என்பதை நினைவு கூர்ந்து வருத்தங்களை பலர் பதிவு செய்தனர். குழந்தை நட்சத்திரங்களாக விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை இப்போது அடையாளமே தெரியவில்லை. இளைஞர்களாகவும் இளைஞிகளாகவும் வளர்ந்து நிற்கின்றனர். முன்பு அறிவிக்கப்பட்டதை அவர்களே மறந்தாலும் மறந்திருப்பார்கள். வீட்டில் துாங்கிக்கொண்டு இருந்தவர்களை எழுப்பி, அரசு அவர்களை அழைத்து வந்து விருது அளித்தது கேலிக்கூத்தாக இருந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகக் கலைஞர்களாக அல்லது வளரும் கலைஞர்களாக இருந்த சிலர் இன்று முன்னணி கலைஞர்களாக வந்து விருதுகளைப் பெற்றதும் நடந்தது.

இதை விட கொடுமை, விருது பெற்ற பலர், இப்போது பீல்டிலேயே இல்லை என்பது தான். மக்களும் அவர்களை மறந்திருப்பர். சிலருக்கு மட்டும் தான் மறக்க முடியாத சில நினைவுகள் இன்றும் இருந்திருக்கலாம். சூட்டோடு சூடாக விருதுகளை பெற்றிருந்தால் அவரவர் உழைப்பிற்கு உன்னதம் கிடைத்திருக்கும்.

உதாரணத்திற்கு 2009ம் ஆண்டில் சிறந்த படத்திற்கான முதல் பரிசை வென்ற 'பசங்க' படத்தில் நடித்த குழந்தைகள் கிஷோர், ஸ்ரீராம் இப்போது இளைஞர்களாக வந்து விருதுகளைப் பெற்றுச் சென்றார்கள். அதே ஆண்டில் சிறந்த படத்திற்கான இரண்டாம் பரிசு வென்ற 'மாயாண்டி குடும்பத்தார்' படத்தின் இயக்குனர் ராசு மதுரவன் சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து போனார். அப்படத்தில் பணியாற்றியவர்களுக்கு அதற்குரிய வருத்தம் நிச்சயம் இருந்திருக்கும். அதே ஆண்டில் 'பசங்க' படத்திற்கு சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது வென்ற, பாடகர் பால முரளிகிருஷ்ணாவும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சிறந்த படத் தொகுப்பாளருக்கான விருது வென்ற எடிட்டர் கிஷோர் சில ஆண்டுகளுக்கு முன் மறைந்தார்.

2010ம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் விருது வென்ற பிறைசூடன் சென்ற ஆண்டு மரணம் அடைந்தார்.

2011ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான முதல் பரிசை வென்ற படம் 'வாகை சூடவா'. அப்படத்தில் கதாநாயகியாக நடித்த இனியா அந்த வருடத்திற்கான சிறந்த நடிகைக்கான பரிசையும் வென்றார். அதற்கு முன்பு ஓரிரு படங்களில் மட்டுமே நடித்த இனியாவுக்கு சிறந்த நடிகைகக்கான விருது ஒரு பெரிய அங்கீகாரம். ஆனால், பத்து ஆண்டுகளுக்குள் அவரது திரையுலகப் பயணத்தில் பல மாற்றங்கள். இப்போது கதாநாயகியாகக் கூட அவர் இல்லை. அப்போதே இந்த விருது கிடைத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியைப் பெற்றிருப்பார். அதே ஆண்டு 'மெரினா' படத்தில் சிறந்த நடிகருக்கான சிறப்புப் பரிசை வென்றவர் சிவகார்த்திகேயன். இப்போது முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்துவிட்டார். கதாநாயகனாக நடித்த முதல் படத்திற்குரிய விருதுக்கான மகிழ்ச்சியை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கொண்டாட வேண்டிய சூழ்நிலை. அதே ஆண்டு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது வென்ற சாராவும் விரைவில் கதாநாயகியாக அறிமுகமாகிவிடுவார்.

2012ம் ஆண்டிற்கான சிறந்த நடிகை விருதை 'கும்கி, சுந்தரபாண்டியன்' படங்களுக்காக வென்ற லட்சுமி மேனனுக்கு இப்போது தமிழில் படங்களே இல்லை. அந்த ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியர் விருது மட்டுமல்லாது, அதற்கடுத்து 2013, 2014ம் வருடங்களுக்காகவும் விருது வென்ற நா.முத்துக்குமார் சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். அவரது விருதை அவரது மகன், மகள் பெற்றுச் சென்றனர். அரங்கமே உணர்ச்சிப் பெருக்கால் மூழ்கியது. 2013ம் ஆண்டில் நா.முத்துக்குமார் 'தங்க மீன்கள்' படத்திற்காக எழுதிய 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' பாடலுக்காக தேசிய விருதையும் வென்றார். அந்த விருதை தன் கரங்களால் பெற்றவருக்கு தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கான விருதுகளைப் பெற காலம் இடம் கொடுக்கவில்லை. 2012ம் ஆண்டில் வெளியான 'விஸ்வரூபம்' படத்திற்காக சிறந்த நடன இயக்குனர் விருது வென்ற பண்டிட் பிர்ஜுமகராஜ் இந்த ஆண்டின் துவக்கத்தில் மறைந்து போனார்.

2013ம் ஆண்டில் சிறந்த படத்திற்கான இரண்டாம் பரிசு வென்ற 'தங்க மீன்கள்' படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது வென்ற சாதனா, இளம் பெண்ணாக மேடையேறி விருதைப் பெற்றார். அவரா இவர் என பலர் ஆச்சரியப்பட்டனர்.
2013ம் ஆண்டுக்கான சிறந்த கதாசிரியருக்கான விருது வென்ற இயக்குனர் பாலுமகேந்திரா (படம் : தலைமுறைகள்) 2014ம் ஆண்டு மறைந்தார்.

2014ம் ஆண்டில் சிறந்த படத்திற்கான சிறப்புப் பரிசை வென்ற 'காக்கா முட்டை' படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுகளை வென்ற விக்னேஷ், ரமேஷ் இளைஞர்களாக மேடையேறி விருதுகளை வாங்கினர்.

சின்னத்திரை விருதுகளை வென்றவர்களில் சிலரும் கடந்த சில ஆண்டுகளில் மரணத்தைத் தழுவியுள்ளனர்.

சரி, இவ்வளவு நாள் கழித்தாவது விருதுகளை வழங்கினார்களே என்று சினிமாக்காரர்கள் சந்தோஷப்பட்டால் அந்த விருதுகள் கூட 2014ம் ஆண்டு வரை தான் தரப்பட்டன. அதன் பிறகு 7 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த ஆண்டுகளுக்கு விருதுகளை எப்போது தருவார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவும் கேலிக்கூத்தாக இருக்கிறது.

திரைக்கலைஞர்களுக்கு அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை விடவும் விருதுகளே பெரிய ஊதியம். இனியாவது சம்மந்தப்பட்டவர்கள் சரியான நேரத்தில் முடிவு எடுக்க வேண்டும். அரசியல் சம்மந்தப்படாத ஒரு விஷயத்தில் எதற்காக இப்படி ஜவ்வாக இழுக்கிறார்கள் என்று தெரியவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.