திருமலை: தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம், மாவட்ட தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி அலுவலகத்தை முதல்வர் சந்திரசேகரராவ் நேற்று திறந்து வைத்தார். பின்னர் கிரிராஜ் கல்லூரி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: 2024ல் பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்க தெலங்கானாவில் இருந்து போராட்டம் தொடங்கப்படும்.
அடுத்த தேர்தலில் பாஜக அல்லாத கொடி பறக்கும். பாஜக அல்லாத அரசை தேர்ந்தெடுத்த பின்னர் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சாகுபடியும் சுமையாக மாறியுள்ளது. என்பிஏ என்ற பெயரில் வியாபாரிகளுக்கு ₹12 லட்சம் கோடியை மத்திய அரசு பதுக்கி வைத்தது. விவசாயிகளுக்கு இலவசங்களை வழங்கக்கூடாது என பிரதமர் மோடி கூறிவருகிறார். விவசாயிகளின் மோட்டார் பயன்பாட்டை கணக்கிட பாஜக தலைமையிலான மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
மோட்டார்களுக்கு மீட்டர் பொருத்தப்படுவதின் பின்னணியில் பெரிய சதி உள்ளது. ரயில்கள், விமானங்கள் மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்கனவே விற்கப்பட்ட நிலையில் தற்போது விவசாயிகள் மீது மோடியின் பார்வை விழுந்துள்ளது. எனவே தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக அரசியலில் ஈடுபட உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.