கர்நாடகாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த நபர் ஒருவர், ஜகத்குரு முருகராஜேந்திர வித்யாபீட மடத்தின் மடாதிபதி சிவ மூர்த்தி முருக சரணரு, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாரளித்திருந்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான ஆடியோவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதைத்தொடர்ந்து, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் இந்த வழக்கில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய, மடாதிபதி சிவ மூர்த்தி முருக சரணருவை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.
இந்த நிலையில், சிவ மூர்த்தி முருக சரணகுருவுக்கு நெருங்கியவராக அறியப்படும், குரு மடிவாலேஷ்வரர் மடத்தின் மடாதிபதி பசவ்சித்தலிங்கா, தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சந்தேகத்துக்குரியதாக மாறியுள்ளது. மேலும், அவர் தூக்குப்போட்டுக்கொண்ட அறையில் கிடைத்த கடிதத்தில், “என்னுடைய மரணத்துக்கு நான் தான் காரணம், இதுதொடர்பாக யாரிடமும் விசாரணை நடத்தக்கூடாது” என பசவசித்தலிங்கா எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், மடாதிபதி சிவ மூர்த்தி முருக சரணரு விவகாரம் தொடர்பாக வெளியான ஆடியோவில், பசவசித்தலிங்கா மடத்தின் பெயர் அடிபட்டதாகவும், இதன்காரணமாக பசவசித்தலிங்கா பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இதன்காரணமாகவே, பசவசித்தலிங்கா தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.