தமிழகத்தில் அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் தடை செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து வகையான பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கும் தடை விதிக்கக் கோரி பலர் பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் “சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் 2018-ல் பிறப்பித்த அரசாணை எண் 84-ன் படி பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த விதமான பிளாஸ்டிக்குகளை பயன்படுத்தலாம், எவற்றை பயன்படுத்தக் கூடாது என்ற வரைமுறைகள் தெளிவாக இல்லை. குறிப்பாக பால் பாக்கெட்டுகளாக பயன்படுத்த பிளாஸ்டிக்குகளை அனுமதிக்கும் நிலையில் தண்ணீர் பாக்கெட்டுகளுக்கு அனுமதி இல்லை.
பிளாஸ்டிக் என்பது ஒரே மாதிரியான பொருளே. மிகக்குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தலாமா என்பது குறித்தும், அவை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கான அனுமதி குறித்தும் எவ்வித தகவலும் அரசாணையில் இல்லை. இதனால் தமிழக மக்கள் எந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம், எவற்றை பயன்படுத்தக் கூடாது என்பதில் குழப்பம் அடைந்துள்ளனர். எனவே பிளாஸ்டிக் தடை நடைமுறைப்படுத்துவது குறித்து குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தடை செய்ய உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தனர்.
இவற்றின்மீதான விசாரணை, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், “தமிழக அரசு பிளாஸ்டிக் தடை தொடர்பாக 2 அரசாணைகளை பிறப்பித்துள்ளது. அதனை முறையாக நடைமுறைப்படுத்த தலைமைச் செயலர் தலைமையில் குழு அமைத்து கண்காணித்து வருகிறது. இந்த குழுவில் அனைத்து துறை செயலாளர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் செயலர் உட்பட 19 பேர் உறுப்பினராக உள்ளனர். இந்த கமிட்டி இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை கூடி விவாதித்து வருகிறது.
பிளாஸ்டிக் தடை நடைமுறைப் படுத்துவதற்காக மாவட்ட அளவிலும், மாநகராட்சி அளவிலும், ஊராட்சி ஒன்றியம் என பல்வேறு நிலைகளில் கமிட்டிகள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM