பிரிட்டன் பிரதமர் பதவி போட்டியில் ரிஷி சுனக் தோல்வி அடைந்தது ஏன்?

பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்குக்கு பெரும்பான்மை கிடைக்காததால் பிரதமராகும் வாய்ப்பை இழந்தார். ரிஷி சுனக் ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்தார். கன்சர்வேட்டிவ் எம்.பி.க்கள் வாக்களித்த 5 சுற்று தேர்தலில் ரிஷிக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. ஆனால், இறுதிகட்ட தேர்தலில் பங்கேற்ற கட்சி உறுப்பினர்கள், லிஸ் ட்ரஸுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன்காரணமாக ரிஷி சுனக் தோல்வியை தழுவியுள்ளார்.

அவரது தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. பிரிட்டிஷ் ராணி எலிசபெத்தைவிட ரிஷியின் மனைவி அக்சிதாவிடம் அதிக சொத்துகள் உள்ளன. இந்தியாவின் இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயண மூர்த்தியின் மகளான அவர், பிரிட்டிஷ் குடியுரிமை பெறவில்லை. அரசுக்கு முறையாக வரி செலுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

பிரிட்டனில் பிறந்து வளர்ந்த, ரிஷி சுனக் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார். இரட்டை குடியுரிமை வைத்திருப்பது பிரிட்டனில் இயல்பானது. எனினும் நாட்டைவழிநடத்த வேண்டிய பிரதமர் இரட்டை குடியுரிமை வைத்திருப்பதை மக்கள் விரும்பவில்லை. அதுமட்டுமின்றி கன்சர்வேட்டிவ் கட்சியில் பெரும்பாலானோர் வெள்ளையின வாதத்தை ஆதரிப்பவர்கள். இந்த காரணங்களால் ரிஷி சுனக்தோல்வியை தழுவியுள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

உட்கட்சித் தேர்தல் ஏன்? – கடந்த 2019-ம் ஆண்டில் பிரிட்டனில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்த கட்சியின் தலைவர் போரிஸ் ஜான்சன், பிரதமராக பதவியேற்றார். மூன்று ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு பிரதமருக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தினர். அடுத்தடுத்து மூத்த அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். கடும் எதிர்ப்பு காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக போரிஸ் ஜான்சன் அறிவித்தார். இதைத் தொடர்ந்து புதிய பிரதமரை தேர்வு செய்ய உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

வாக்கு சதவீதம் எவ்வளவு? – கன்சர்வேட்டிவ் கட்சி விதிகளின்படி 20 எம்.பி.க்களின் ஆதரவு பெற்றவர்கள் பிரதமர் பதவிக்கான போட்டியில் பங்கேற்க முடியும். இதன்படி, 11 பேர் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் 3 பேர் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினர். 8 பேர் களத்தில் இருந்தனர். ஐந்து சுற்றுகளாக நடந்த உட்கட்சி தேர்தலில் கன்சர்வேட்டிவ் எம்.பி.க்கள் வாக்களித்தனர். குறைவான வாக்குகளை பெற்றவர்கள் ஒவ்வொரு சுற்றிலும் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர்.

இறுதியில், வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸுக்கும் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்குக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதிக்கட்ட தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியினர் வாக்களித்தனர். இதன் முடிவுகள் நேற்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில், லிஸ் ட்ரஸ் 57.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். ரிஷி சுனக்குக்கு 42.6 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதிக வாக்குகளை பெற்ற லிஸ் ட்ரஸ், பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்று அதிகாரபூர்வமாக பதவியேற்க உள்ளார். அவருக்கு ராணி எலிசபெத் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

தமிழக வம்சாவளி பெண்: போரிஸ் ஜான்சன் அரசில் குஜராத்தைச் சேர்ந்த பிரீத்தி படேல் உள்துறை அமைச்சராக பணியாற்றினார். புதிய பிரதமராக பதவியேற்க உள்ள லிஸ் ட்ரஸ் அமைச்சரவையில் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன், உள்துறை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். அவரது தாயார் உமா, மொரீஷியஸில் தமிழ் இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை கிறிஸ்டி பெர்னான்டஸ் இந்தியாவின் கோவா மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்திய வம்சாவளி தலைவர்களில் சுயெல்லா பிராவர்மேன் மட்டுமே அமைச்சரவையில் இடம்பிடிப்பார் என்று தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.