“புதிய தொழில் ஆரம்பிக்கணுமா? எங்க நாட்டுக்கு வாங்க!”-இந்தியர்களுக்கு கரம் நீட்டிய கியூபா!

கியூபாவில் தொழில்கள் துவங்க அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும் என்று சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் இந்தியாவுக்கான கியூபா நாட்டு தூதர் பேசியுள்ளார். மேலும் கியூபாவில் தொழில் துவங்க வருமாறு இளம் தொழில் முனைவோருக்கு அழைப்பு விடுத்தார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 5-வது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஸ்டார்ட்அப் தொழில்கள் துவங்குவதற்கான நிதிகள், ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கியூபா நாட்டின் இந்தியாவுக்கான தூதர் அபெல் அபெல் டேஸ்பைன் கலந்துகொண்டார். மேலும், இவர் பூட்டான், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாட்டிற்கும் தூதுவராக உள்ளார். தொடர்ந்து தொழில் முனைவதற்கான ஆலோசனைகள் குறித்து பேசும்போது, இந்தியாவும் கியூபாவும் நேரு ஆட்சி காலத்தில் இருந்து தற்போது வரை மிக நெருங்கிய நட்பு நாடாக உள்ளது. அனைத்து வகையிலும் நட்பு பாராட்டி தோழமையுடன் செயல்பட்டு வருகிறது.
image
தனது அழைப்பில் அவர், “கியூபா அனைத்து வகையிலான தொழில்களை துவங்கவும் உகந்த நாடாக உள்ளது. கியூபாவில் தொழில் தொடங்க வருபவர்களுக்கு அனைத்து உதவிகளையும், வசதிகளையும் செய்து கொடுக்கிறது. இளம் தலைமுறையினர், மாணவர்கள் எங்கள் நாட்டில் தொழில் துவங்க வாருங்கள்” என்று கூறி அழைப்பு விடுத்தார்.
மேலும் பேசுகையில், “மரபுசார எரிசக்தி தொடர்பான தொழில்கள் துவங்க முன்னுரிமையும், உதவிகளும் செய்து கொடுக்கப்படுகிறது. எரிசக்தி தொடர்பான தொழில்களை துவங்க அனைவரும் கியூபாவை தேர்வு செய்ய வேண்டும். அமெரிக்காவை விட கியூபா நாடு தொழில் முனைவோருக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறது. இந்தியாவை சேர்ந்த இதயம் நல்லெண்ணெய் நிறுவனர் முத்து, உலகம் முழுக்க ஹோட்டல் தொழில் செய்து வருகிறார். ஆனால், மற்ற நாடுகளை விட கியூபாவில் மட்டும் ஐந்து ஓட்டல்களை துவங்கி, வெற்றிகரமாக நடத்தி வருகிறார்” என்றார்.
image
இதனை தொடர்ந்து எத்தியோப்பியா நாட்டின் அம்போ பல்கலைக்கழக இணை பேராசிரியர் தமிழரசு பேசும்போது, “இளைஞர்கள் படிக்கும் காலத்திலேயே தங்களின் எதிர்கால திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும். அதிலும், வேலைக்கு செல்லும் எண்ணைத்தை விட, தொழில் துவங்கும் எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். பலவகையிலான தொழில்கள் இங்கு உள்ளன. அதுபோல புதுப்புது தொழில்களை துவங்கும் எண்ணங்களை வளர்த்து தொழில் முனைவோராக வரவேண்டும்” என்று பேசினார்.
தொடர்ந்து பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் மற்றும் பேராசிரியர்கள் முதலீடில்லா இணைப்பு தொழில்கள் செய்தல் குறித்த ஆலோசனைகள் வழங்கினர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.