சென்னை: தமிழக அரசு கொண்டுவந்துள்ள ‘புதுமைப்பெண்’ திட்டம், நாடு முழுவதும் புரட்சியை ஏற்படுத்தும் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.
சென்னை பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் தமிழகம் முழுவதும் 26 தகைசால் பள்ளிகள், 15 மாதிரிப் பள்ளிகள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
உலகத்திலேயே சிறந்த ஆசிரியர்களை நாம் கொண்டுள்ளோம். கடினமான சூழலில் திறமையாக பணியாற்றி, நல்ல தேர்ச்சி சதவீதத்தை கொண்டு வருவதற்காக ஆசிரியர்களுக்கு தலைவணங்குகிறேன். தற்போது, பல்வேறு திட்டங்கள் ஆசிரியர் தினத்தில் தொடங்கப்படுகின்றன. அதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
வருங்காலத்தில் தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி, நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் சிறப்பான பாதையை உருவாக்கும்.
நம் நாட்டில் ஒரு மாநில முதல்வர், வேறு மாநிலத்துக்கு சென்று அரசுப் பள்ளிகளை பார்வையிடுவது மிகவும் அரிது. தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம்டெல்லிக்கு வந்தபோது, அவரைவரவேற்று அரசுப் பள்ளிக்கும், கிளினிக்குக்கும் அழைத்துச் சென்றேன். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், டெல்லியில் உள்ளதுபோல தமிழகத்திலும் மாதிரிப் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், அந்த விழாவுக்கு என்னை அழைப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த விழா நடைபெற 2, 3 ஆண்டுகள் ஆகும் என நினைத்த நிலையில், 6 மாதத்திலேயே, சொன்னதை நிறைவேற்றி மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டார்.
நன்றாக படிக்கும் மாணவிகள், அதற்கான வசதி இல்லாததால், படிப்பை தொடர முடிவது இல்லை.அந்த மாணவிகள் படிப்பை தடையின்றி தொடர ‘புதுமைப்பெண்’திட்டம் உதவியாக இருக்கும். மாணவிகளின் குடும்பத்துக்கு நிதியுதவி அளிப்பதுடன், திருமண வயது வரும் முன்னரே திருமணம் செய்யும் நிலையும் கணிசமாக குறையும்.
இதனால், இத்திட்டத்தை நாடு முழுவதும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. ‘புதுமைப்பெண்’ திட்டம் தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் புரட்சியை ஏற்படுத்தும்.
தமிழகம், டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் தவிர, பெரும்பாலான மாநிலங்களில் அரசுப் பள்ளிகளின் நிலை பரிதாபமாக உள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சரியான வசதி ஏற்படுத்தாவிட்டால் எப்படி நாடு வளர்ச்சி அடையும்? நீண்ட, நெடிய உரை நிகழ்த்தினால் மட்டும்வளர்ந்துவிடுமா? அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி கொடுக்காத வரை, வளர்ச்சியடைந்த நாடு என்ற கனவு நிறைவேறாது.
நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனபோதும், தேவையான கல்வியை நாம் இன்னும் தரவில்லை.
அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசும் இணைந்தால், 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் சிறப்பான கல்வியை வழங்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.