வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: வரலாறு காணாத கனமழையும், முந்தைய காங்கிரஸ் அரசின் தவறான நிர்வாகமுமே காரணம் என முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த 3 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளை வெள்ள நீர்சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஐ.டி., நிறுவன ஊழியர்கள் வெள்ளத்திற்கு மத்தியில், டிராக்டர் மூலம் அலுவலகம் சென்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில், மழை வெள்ளம் தொடர்பாக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது: பெங்களூருவில், இதுபோன்ற கனமழை முன்னர் பெய்தது கிடையாது. கடந்த 90 ஆண்டுகளாக இந்தளவு மழை பெய்தது கிடையாது. ஏரி குளங்கள் நிரம்பி வழிகின்றன. சிலவற்றில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தினமும் கனமழை பெய்யும் நிலையில், மழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மழை வெள்ளத்தால், நகரம் முழுவதும் பாதிக்கப்படவில்லை. இரண்டு மண்டலங்களில் மட்டுமே பாதிப்பு உள்ளது. குறிப்பாக மகாதேவ்புரா பகுதியில் உள்ள 69 ஏரி குளங்கள் நிரம்பி வழிகின்றது. சிலவற்றில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள அனைத்து வீடுகளும் தாழ்வான பகுதிகளில் உள்ளது. அங்கு ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன.
தற்போதைய சூழ்நிலையை அரசு சவாலாக எடுத்துக்கொண்டு செயல்படுகிறது. அலுவலர்கள், பொறியாளர்கள், ஊழியர்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர். ஏராளமான ஆக்கிரமிப்புகளை அகற்றினர். தொடர்ந்து அது நடக்கும். பெரும்பாலான இடங்களில் வெள்ள நீரை வடியவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஒன்று அல்லது இரண்டை தவிர மற்ற இடங்களில் வெள்ள நீர் வடிந்து விட்டது.
முந்தைய காங்கிரஸ் அரசின் தவறான நிர்வாகமும், திட்டமிடப்படாத நிர்வாகமுமே தற்போதைய பாதிப்புக்கு காரணம் காங்., ஆட்சியில் எல்லா இடங்களிலும் கட்டட அனுமதியை சரமாரியாக கொடுத்துள்ளனர். ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அதிகமாக உள்ளன. தற்போதைய துன்பத்திற்கு இந்த ஆக்கிரமிப்பு கட்டடங்களே காரணம். ஏரி குளங்களை பராமரிக்க அவர்கள் எண்ணியது கிடையாது. ஏரியின் முகத்துவாரம் என்று பாராமல் கட்டடங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளனர்.
தற்போது, நான் இதனை சவாலாக எடுத்து கொண்டுள்ளேன். மழைநீர் வடிகால் அமைக்க ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால், மழை நீர் தடையில்லாமல் குளங்களுக்கு சென்று சேரும். இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement