எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான பொறுப்பை எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் நிதியமைச்சு மற்றும் அது தொடர்பான அதிகாரிகளிடம் கையளிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…
‘மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு வழங்கும் பரிந்துரைகளுக்கு அமையவே நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். இன்று உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறையும் போது அதை இன்றைய விலை சூத்திரத்தில் சேர்க்க முடியாது. ஏனெனில் கடந்த 30 நாட்களின் சராசரி மதிப்பையே நாம் விலை சூத்திரத்திற்கு எடுத்துக்கொள்கிறோம்.
அந்த சராசரி மதிப்பையும் நாம் இறக்குமதி செய்யும் விலையையும் சேர்க்க வேண்டும். சுத்திகரிப்பு நிலையத்தில்; உற்பத்தி செய்யப்படும் எரிபொருட்களின் விலையையும், இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களின் விலையையும் கணக்கில் கொண்டு விலையை தீர்மானிக்க வேண்டும்.
தற்போது இருப்பில் உள்ள எரிபொருட்கள் அனைத்தும் நாம் இறக்குமதி செய்யும் விலையை விட அதிக விலையில் உள்ளது. பெட்ரோல், சூப்பர் பெட்ரோல், சூப்பர் டீசல் என்பவற்றால் தற்போது நமக்கு இலாபம் இருக்கிறது. டீசலை எடுத்துக் கொண்டால் நமது செலவைப் போன்று சராசரி தொகையும் இருக்கிறது. மண்ணெண்ணெய் விலையை எடுத்துக்கொண்டாலும், இணையான தொகையாகத் தான் இருக்கும்’ என்றார்.