பேருந்தில் தனியாக அழுது கொண்டிருந்த பெண் குழந்தை.. திட்டமிட்டு விட்டுச்சென்ற பெண்!

தருமபுரியில் பேருந்தில் குழந்தையை விட்டுச்சென்ற பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கணிகோட்டையில் இருந்து தருமபுரிக்கு வந்த அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி செல்ல தயாராக இருந்தது. அந்தப் பேருந்து இருக்கையில் இரண்டு வயதுள்ள பெண் குழந்தை இருந்துள்ளது. தொடர்ந்து பேருந்து பயணிகளுடன் புறப்பட தயாரான நேரத்தில் பேருந்து இருக்கையில், இருந்த அந்த குழந்தை அழுகை சத்தம் கேட்டு பயணிகள் குழந்தையின் பெற்றோரை தேடினர். ஆனால் யாரும் வராத சூழலில் பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்கு பயணிகளை அழைத்து வரும் தரகர் பெரியசாமி, உடனடியாக குழந்தையை மீட்டு தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் கடை வியாபாரிகள் உதவியுடன் ஒப்படைத்தார்.
image
பின்னர் தருமபுரி காவல் ஆய்வாளர் நவாஸ் உத்தரவின் பேரில் பேருந்து நிலையம் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் குழந்தையை விட்டு சென்ற மர்ம பெண் யார் என்பது குறித்து கண்டறிய, பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்பொழுது பச்சை நிற சுடிதார் அணிந்து வந்த ஒரு மர்ம பெண் சுமார் 2 வயது மதிக்கதக்க பெண் குழந்தையுடன், குளிர்பான கடையில், குளிர்பானம், தண்ணீர் மற்றும் குழந்தைக்கு சிப்ஸ் வாங்கி கொடுத்தும், தான் குடித்து விட்டு, குழந்தைக்கு ஊட்டுவதும் என மாறி, மாறி அருந்திவிட்டு, குழந்தையை தூக்க சென்றார்.
இதனையடுத்து நின்றிருந்த அரசுப் பேருந்தில் முன்பக்கமாக ஏறி, பின்னர் குழந்தையை பேருந்தில் விட்டு விட்டு பின்பக்க படி வழியாக இறங்கி சென்றது பதிவாகியிருந்தது. இந்தக் காட்சிகள் வைத்து பார்க்கும் போது, இந்த பெண் குழந்தை கடத்தப்பட்ட குழந்தையா? குடும்ப தகராரு காரணமாக தாயே குழந்தையை பேருந்து நிலையத்தில் விட்டு சென்றாரா? இந்த குழந்தைக்கு உண்மையான பெற்றோர் யார்? என கண்டறியும் பணியிலும் மற்றும் அந்த மர்ம பெண் குறித்து காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
image
இந்நிலையில் பெற்றோரை காணமால் தொடர்ந்து அழுது கொண்டு இருந்த குழந்தைக்கு பேருந்து நிலையத்தில் கடைகள் வைத்திருக்கும் பெண்கள் உடைமாற்றி பால் மற்றும் உணவு அளித்து தூங்க வைத்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து தொப்பூர் அருகே உள்ள தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டு தற்பொழுது அந்தப் பெண் குழந்தை பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பட்டப்பகலில் இளம்பெண் ஒருவர், பேருந்து நிலையத்தில் பேருந்தில் பெண் குழந்தையை விட்டுவிட்டு சென்ற சம்பவம் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.