தேசிய அரசியலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நிகராக சரியான தலைவர் இல்லாமல் இருக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு யார் தலைமை தாங்குவது என்ற போட்டி எதிர்க்கட்சிகளிடையே ஏற்பட்டுள்ளது. சோசியல் மீடியாக்களும், பாஜகவும் இணைந்து ராகுல் காந்தியை பப்புவாக சித்தரித்துவிட்டதால் அவரை எதிர்க்கட்சிகளின் தலைவராக ஏற்றுக்கொள்ள மற்ற கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றன. மம்தா பானர்ஜி தேசிய அரசியலுக்கு வர சரத்பவார் உட்பட சில தலைவர்களை சந்தித்து பேசினார். ஆனாலும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் பெரிய முன்னேற்றம் இல்லை. துணை ஜனாதிபதி தேர்தலில் கூட எதிர்க்கட்சிகளின் வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க மறுத்துவிட்டார் மம்தா. சரத்பவார் இந்த போட்டியில் தான் இல்லை என்று முதலிலேயே ஒதுங்கிக்கொண்டார். தற்போது பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளருக்கு போட்டி போடுகின்றனர்.
“மக்கள் அழைக்கிறார்கள்’’
இந்த நிலையில் தான், சந்திரசேகர் ராவ் தெலங்கானாவின் நிஜாமாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
“மக்கள் என்னை தேசிய அரசியலுக்கு அழைக்கிறார்கள். உங்கள்(மக்கள்) ஆதரவுடன் தேசிய அரசியலுக்கு செல்கிறேன். பாஜக இல்லாத பாரதத்திற்காக நாம் போராடவேண்டும். 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு மத்தியில் பாஜக அல்லாத அரசு பதவிக்கு வரும். எங்களது மாநிலத்தை போன்று நாட்டையும் வளர்ச்சியடைய செய்வோம். நாட்டில் எந்த மாநிலமும் விவசாயிகள் உட்பட அனைவருக்கும் 24 மணி நேரமும் மின்சாரம் கொடுப்பதில்லை. 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு மத்தியில் எங்களது அரசு அமையும். விவசாயிகள் அனைவருக்கும் குறிப்பாக பாஜக அல்லாத மாநிலங்களுக்கு 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு இலவச மின்சாரம் வழங்கப்படும்.
கார்ப்பரேட் கம்பெனிகளின் கடனை தள்ளுபடி செய்து 12 லட்சம் கோடியை கொள்ளையடித்துவிட்டனர். விவசாய துறையில் பிரச்னையை ஏற்படுத்தி நிலத்தை அபகரித்து கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கொடுக்க பாஜக அரசு முயற்சிக்கிறது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்துவிட்டது. எப்போதும் மக்களிடம் மதத்தின் பெயரால் வெறுப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். மக்கள் இது குறித்து சிந்திக்கவேண்டும். நமக்கு மாற்றம் தேவை” என்று தெரிவித்தார். மத்தியில் சரியான எதிர்க்கட்சி தலைவர் அமையாத காரணத்தால் சந்திரசேகர் ராவ் அதனை நிரப்ப இவ்வாறு பேசி வருகிறார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.