புதுடெல்லி: மதப் பெயர்கள் மற்றும் சின்னங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக உத்தரபிரதேச ஷியா முஸ்லிம் மத்திய வக்ஃபு வாரியத் தலைவர் சையது வசீம் ரிஸ்வி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கவுரவ் பாட்டியாஆஜரானார். அவர் வாதிடுகையில், “1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறும் வகையில் அரசியல் கட்சிகளின் பெயர்களும் அவற்றின் சின்னங்களும் உள்ளன. சில கட்சிகள் தங்கள் கொடிகளில் பிறை நிலவு மற்றும் நட்சத்திரங்களை கொண்டுள்ளன. மதப் பெயரைக் கொண்ட ஒரு கட்சியின் வேட்பாளர் வாக்கு கோருவது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் மதச்சார்பின்மையை மீறுவது ஆகும்.
மதச்சார்பின்மைக்கு எதிரானது
அங்கீகரிக்கப்பட்ட 2 அரசியல் கட்சிகள் தங்கள் பெயர்களில் முஸ்லிம் என்ற பெயரைக் கொண்டுள்ளன. மேலும் பல கட்சிகள் மதப் பெயர்களை கொண்டுள்ளன. இது நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது” என்றார்.
இதற்கு, “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்), இந்து ஏக்தா தளம் போன்ற கட்சிகள் தேர்தல்களில் போட்டியிடுகின்றனவா?” என்று நீதிபதி எம்.ஆர்.ஷா கேள்வி எழுப்பினார்.இதற்கு வழக்கறிஞர் பாட்டியா, “ஐயுஎம்எல் கட்சி கேரளாவில் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களை கொண்டுள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது” என்றார்.
இதையடுத்து இந்த மனுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் மதப் பெயர்கள் மற்றும் சின்னங்களை பயன்படுத்தும் கட்சிகளையும் வழக்கில் சேர்க்க உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை அக்டோபர் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மதப் பெயரைக் கொண்ட ஒரு கட்சியின் வேட்பாளர் வாக்கு கோருவது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் மதச்சார்பின்மையை மீறுவது ஆகும். அங்கீகரிக்கப்பட்ட 2 அரசியல் கட்சிகள் தங்கள் பெயர்களில் முஸ்லிம் என்ற பெயரைக் கொண்டுள்ளன.