மதுபான ஊழல்: ஒரே நேரத்தில் 30 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டெல்லி மதுபான ஊழல் தொடர்பாக அமலாக்க இயக்குனரகத்தின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக டெல்லி கலால் கொள்கை மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் (ED) நாட்டின் பல பகுதிகளில் சோதனை நடத்தி வருகிறது. நாட்டில் 30 இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக அதிகரிகள் தெரிவித்தனர். டெல்லியுடன் சேர்த்து 30 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருவதை பார்த்தால், இந்த வழக்கை மிகவும் தீவிரமாக அமலாக்க இயக்குனரகம் கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு மற்றும் அலுவலகம் தவிர, 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி மட்டுமின்றி உ.பி.யில் லக்னோ, ஹரியானாவில் குருகிராம், சண்டிகர், பஞ்சாப், மகாராஷ்டிராவின் மும்பை, தெலுங்கானாவில் ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

டெல்லி மதுபான ஊழல் தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) எஃப்ஐஆர் அடிப்படையில் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ ஆகஸ்ட் 17ஆம் தேதி பதிவு செய்தது. சிபிஐ தனது எப்ஐஆரில் சிசோடியாவை நம்பர் ஒன் குற்றவாளியாகக் குறிப்பிட்டுள்ளது. ஐபிசி பிரிவுகள் 120-பி (குற்றச் சதி) மற்றும் 477-ஏ (பொய் கணக்கு) ஆகியவற்றின் கீழ் சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்தது. மதுபான வியாபாரிகளுக்கு ரூ.30 கோடி விலக்கு அளிக்கப்பட்டதாகக் கூறி இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலால் விதிகளை மீறி கொள்கை விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.

டெல்லி மதுபானம் தொடர்பான பரிந்துரைகள் மற்றும் முடிவுகளை எடுப்பதில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அப்போதைய ஆணையர் (கலால்) அர்வ கோபி கிருஷ்ணா, துணை ஆணையர் (கலால்) ஆனந்த் திவாரி மற்றும் உதவி ஆணையர் (கலால்) பங்கஜ் பட்நாகர் ஆகியோர் முக்கியப் பங்காற்றியதாகக் கூறப்படுகிறது. ED பணமோசடி தடுப்பு (பிஎம்எல்ஏ) வழக்கை பதிவு செய்துள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் இன்று விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளது எனத் தெரிகிறது.

மதுபான வியாபாரிகள் உள்ள இடங்களில் இந்த சோதனைகள் நடப்பதாக தெரிகிறது. தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கே.கவிதாவின் பெயரும் டெல்லி மதுபான ஊழலில் எழுந்துள்ளதால், அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹைதராபாத்திலும் ரெய்டுகள் நடத்தி வருவதால், இந்த வழக்கில் அடுத்த திருப்பம் என்னவாக இருக்கும் என்பது சுவாரஸ்யம்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.