மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டத்தை வரவேற்கிறேன் என ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி. தெரிவித்தார்.
தேனி எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் நேற்று மாலை பழநி வந்தார். பழநி தண்டாயுதபாணியை ராஜ அலங்காரத்தில் தரிசித்தார். பின்னர் தங்க ரதம் இழுத்து வழிபட்டார்.
அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: மறைந்த முதல்வர் ஜெய லலிதா மாணவர்களின் கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக இலவச லேப்-டாப், சைக்கிள் எனப் பல சலுகைகளை வழங்கினார். அதேபோல் தற்போது இருக்கிற அரசு மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை வரவேற்கிறேன்.
அதிமுக பொதுக்குழு தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்வது குறித்து வழக்கறிஞர்களுடன் ஒருங் கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். சசிகலா, டிடிவி தினகரன் உட்பட பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.