மாவட்டத்தில் ரூ.8.91 கோடி மதிப்பீட்டில் 17,553 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவ-மாணவிகள் 17,553 பேருக்கு ரூ.8.91 கோடி மதிப்பீட்டில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இலவச சைக்கிள் வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் 2021-2022ம் கல்வியாண்டில் பிளஸ் 1 படித்து, தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க அரசு ரூ.323.03 கோடி நிதி ஒதுக்கியது.

 இதையடுத்து, மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி சென்னையில் துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க, சைக்கிளின் உதிரிபாகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு, சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 2022-2023ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் 17,553 மாணவ-மாணவிகளுக்கு ரூ.8 கோடியே 91 லட்சத்து 53 ஆயிரத்து 907 மதிப்பீட்டில் இலவச சைக்கிள் வழங்க உதிரிபாகங்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

ஈரோடு மாவட்டத்தில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் துவக்க விழா நேற்று நடந்தது. இதில், ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் உள்ள மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசு பெண்கள் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில், தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்று 395 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி, திட்டத்தை துவக்கி வைத்தார்.

அப்போது, அமைச்சர் சு.முத்துசாமி பேசுகையில்,‘‘மாவட்டத்தில் உள்ள 127 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் 8,357 மாணவர்கள், 9,196 மாணவிகள் என 17,553 பேருக்கும் இலவச சைக்கிள்கள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் முழுமையாக வழங்கப்படும்’’, என்றார். இந்நிகழ்ச்சியில், ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, எம்பி கணேசமூர்த்தி, எம்எல்ஏ திருமகன் ஈவெரா, முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.