டெல்லியில் இளைஞன் ஒருவர் (28 வயது), இந்திய ராணுவ அதிகாரியாகக் (Army Major) காட்டிக் கொண்டு, சிஐஎஸ்எஃப் பெண் கான்ஸ்டபிளை (CISF constable) திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர் தீபக் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சிஐஎஸ்எஃப் பெண் கான்ஸ்டபிள் போலீஸில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில், “தீபக் குமார் என்பவருடன் ஒரு திருமண வலைத்தளம் மூலம் தொடர்பு ஏற்பட்டது. அவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருவதாக தெரிவித்தார். என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும் என்னுடைய உறவினர்களுக்கு அரசு வேலை தருவதாகக் கூறி ரூ. 28 லட்சம் வாங்கிவிட்டார்” என தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் டெல்லி பிந்தாபூரில் இருந்து ஒரு போலீஸ் குழு அவரை பீகாரில் உள்ள பாட்னாவில் கைது செய்தது. அவரை கைது செய்வதற்கு முன்பு தீபக் குமாரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 40 பேர் சேர்ந்து காவல்துறையினரைத் ஒரு அறையில் அடைத்து வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.
பீகாரில் உள்ள அர்வால் மாவட்டத்தைச் சேர்ந்த தீபக் குமார் அறிவியல் பட்டதாரி ஆவார். அரசு தேர்வுகளில் தேர்ச்சி பெறாததால், அவர் மக்களை ஏமாற்றத் தொடங்கியதாக போலீஸார் தெரிவித்தனர்.