'ரூ.85 லட்சம் வரை கிடைக்கும்'- இழப்பீட்டு தொகை அறிவிப்பால் ஃபோர்டு ஊழியர்கள் அதிருப்தி

சென்னை மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலை கார் உற்பத்தியை நிறுத்தியுள்ள நிலையில், ஊழியர்களுக்கான இழப்பீட்டு தொகையை ஃபோர்டு நிர்வாகம் அறிவித்துள்ளது. நிர்வாகம் அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை எனக்கூறி நிரந்தர தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை அடுத்த மறைமலை நகரில் ஃபோர்டு தொழிற்சாலை சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. இந்த ஆலைகளில் வருடத்திற்கு 4 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யமுடியும் என்ற நிலையில், கடந்த சில ஆண்டுகளாக 80 ஆயிரம் கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தன.
இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்ததாகக் கூறப்பட்டது. இதனால் 14,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே இந்தியாவில் உற்பத்தி நிறுத்தப்படும் எனவும் கடந்த வருடம் ட்விட்டர் வாயிலாக அறிவித்தது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் முழுமையாக உற்பத்தியை நிறுத்தியது.
ஃபோர்டு தொழிற்சாலை ஊழியர்கள் தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து தொழிற்சாலை இயங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். மேலும் குஜராத் தொழிற்சாலையை எப்படி வேறு நிறுவனத்திற்கு தொழிற்சாலை ஊழியர்களுடன் விற்பனை செய்ய உள்ளதோ, அதேபோல சென்னை ஃபோர்டு தொழிற்சாலையை ஊழியர்களுடன் விற்பனை செய்யவேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதுதொடர்பாக தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். தமிழக அரசு, தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் நடத்திய முத்தரப்பு பேச்சு வார்த்தையின் அடிப்படையில், போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து ஊழியர்கள் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் இழப்பீடு தொகை நிர்வாகம் சார்பில் கொடுக்கப்பட்டால், வருடத்திற்கு 215 நாட்கள் என கணக்கு செய்து கொடுக்கவேண்டும் எனத் தெரிவித்திருந்தனர். நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், குறைந்தபட்சம் 185 நாட்களாவது, கொடுத்தே தீர வேண்டும் என தொழிற்சங்கத்தினர் கூறிவந்தனர். ஆனால் நிர்வாகம் தரப்பில் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக சுமார் 68 முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
image
இறுதியாக இன்று சென்னை மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலை சார்பில், 130 நாட்கள் மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. VSS SCHEME என்ற பெயரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் செப்டம்பர் 23ஆம் தேதிக்குள் இதற்கு, விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ஊழியர் ஒருவருக்கு 33 லட்ச ரூபாயிலிருந்து, அதிகபட்சமாக 85 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஃபோர்டு ஊழியர் கூறும் போது, தங்களுடைய வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறோம். ஆனால் நிர்வாகமும் நாங்கள் எதிர்பார்த்ததைவிட குறைந்த அளவு இழப்பீடு தொகையை கொடுத்துவிட்டு, இவ்வளவு நாள் இந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் இருந்த எங்களை கைவிட்டு விட்டனர். நிர்வாகம் கொடுக்கும் இழப்பீடு தொகையில் 30 சதவீதம் வரியாக செல்லும் என்பதாலும், ஃபோர்டு இந்தியாவின் வளர்ச்சியில் படித்த பட்டதாரிகளான தங்களின் பங்கும் இருக்கிறது என்பதாலும் ஃபோர்டு நிர்வாகம் அறிவித்துள்ள இழப்பீட்டு தொகை போதுமானதாக இல்லை என நிரந்தர தொழிலாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
– ந. பால வெற்றிவேல்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.