மும்பை: விதிமுறைகளை பின்பற்றாத புகாரின் அடிப்படையில், தஞ்சாவூரில் செயல்படும் நிக்கல்சன் கூட்டுறவு நகர வங்கி உட்பட 5 கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. நாடு முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் நடைபெறும் முறைகேடுகளை கண்டறிந்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் ‘வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு வங்கிகளின் பொறுப்புகளை செயல்படுத்துதல்’ என்ற திட்டத்தின் அடிப்படையில் விதிமுறை மீறி செயல்பட்ட கூட்டுறவு வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், ‘கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள கர்நாடகா மாநில கூட்டுறவு அபெக்ஸ் வங்கி, மகாராஷ்டிரா மாநிலம் தானே பாரத் சஹாகாரி வங்கி லிமிடெட், ஜான்சியில் உள்ள ராணி லட்சுமிபாய் அர்பன் கூட்டுறவு வங்கி, தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் செயல்படும் நிக்கல்சன் கூட்டுறவு நகர வங்கி, ரூர்கேலாவில் உள்ள நகர்ப்புற கூட்டுறவு வங்கி ஆகிய 5 வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் செயல்படும் நிக்கல்சன் கூட்டுறவு நகர வங்கி ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை மீறியதற்காக ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.