பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்தாலும், மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஓணத்தையொட்டி 60 சதவீத காய்கறிகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி தாலுகாவில் சுற்றுவட்டார கிராமங்களில் தென்னைக்கு அடுத்தபடியாக மானாவாரி பயிர்கள் மற்றும் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். வடக்கிபாளையம், டி.நல்லிகவுண்டன்பாளையம், சமத்தூர், ஆத்துப்பொள்ளாச்சி, தாளக்கரை, சூலக்கல், பொன்னாபுரம், கோட்டூர், முத்தூர், அம்பராம்பாளையம், போடிபாளையம், புரவிபாளையம், ஜலத்தூர், ஜமீன் ஊத்துக்குளி கிராமங்களில் அதிகளவு காய்கறி சாகுபடியாகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை மழை பெய்யும்போதும் அதன்பின்னர், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை காலத்திலும் காய்கறி சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. தக்காளி, வெண்டை, கத்தரி, பூசணி, பச்சை மிளகாய் மற்றும் பந்தல் காய்கறிகளான பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய் உள்ளிட்டவை சாகுபடி தீவிரமடையும். குறிப்பிட்ட மாதங்களில் நல்ல விளைச்சலடைந்ததும், காய்கறிகளின் அறுவடை தீவிரமாக இருக்கும்.
சுற்றுவட்டார கிராமங்களில் உற்பத்தியாகும் பெரும்பாலான காய்கறிகள் பொள்ளாச்சி நகரில் காந்தி தினசரி மார்க்கெட், வெங்கடேசா காலனி திரு.வி.க., மார்க்கெட் மற்றும் தேர்நிலை மார்க்கெட்டுகளுக்கு அன்றாடம் காய்கறிகளின் வரத்தை பொறுத்து விலை நிர்ணயித்து விற்பனை செய்யப்படும். விஷேச நாட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும், பிற நாட்களில் விலை சற்று குறைவாக இருக்கும்.கடந்த 2021ம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை அடுத்தடுத்து இருந்தது.
இதனால், விவசாய விளை நிலங்களின் இந்த ஆண்டில் கடந்த மார்ச் மாதம் வரையிலும் ஈரப்பதம் அதிகமானதால், காய்கறி சாகுபடி செய்யப்பட்டது. அடுத்தடுத்து காய்கறி சாகுபடி மற்றும் அறுவடையால், மார்க்கெட்டுகளுக்கு தினமும் டன் கணக்கில் காய்கறிகளின் வரத்து இருந்தது.அதுபோல், நடப்பாண்டிலும், ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் அடிக்கடி கோடை மழை பெய்தது.
பின்னர், ஜூன் மாதம் 3வது வாரத்திலிருந்து தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியதால் கடந்த ஜூன் மாதத்தில் விவசாயிகள் பலர், விளை நிலத்தை உழவு மேற்கொண்டு காய்கறிகளை சாகுபடி செய்தனர். பருவமழை பல வாரங்கள் பெய்ததால், காய்கறி செடிகள் செழித்ததுடன், உற்பத்தியும் அதிகரித்தது. இதனால், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து வழக்கத்தைவிட அதிகரித்தது.
மேலும், வெளியூர் காய்கறிகள் வரத்து அதிகரிப்பால், கடந்த மாதம் துவக்கத்தில் ஒருசில காய்கறிகளை தவிர பெரும்பாலான காய்கறிகளின் விலை குறைவாகவே இருந்தது. குறிப்பாக, தக்காளி, வெண்டை, புடலை, பீர்க்கங்காய், கொத்தவரை, பூசணி, அவரை உள்ளிட்ட காய்கறிகள் மிக குறைவான விலைக்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள், தங்களுக்கு உரிய லாபமின்றி அவதிப்பட்டனர்.கடந்த வாரத்தில் இருந்து சுபமுகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து இருந்ததால், மார்க்கெட்டுகளுக்கு கொண்டுவரப்பட்ட காய்கறிகளின் விலை மளமளவென உயர துவங்கியது. அதிலும், ஊட்டி மற்றும் குன்னூர் என வெளியூர்களிலிருந்து கொண்டு வரப்படும், கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளின் விலை பலமடங்கு அதிகரித்தது.
இந்நிலையில், வரும் 8ம் தேதி கேரளாவில் ஓணம் பண்டிகை என்பதால், கடந்த ஒரு வாரமாக, பொள்ளாச்சி மார்க்கெட்டுகளிலிருந்து கேரளாவுக்கு டன் கணக்கில் காய்கறிகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. மார்க்கெட்டுகளுக்கு வரத்தாகும் காய்கறிகளில் சுமார் 60 சதவீதத்திற்கு மேல், கேரள மாநிலத்துக்கு பயணமாகிறது என்கின்றனர் வியாபாரிகள்.
பொள்ளாச்சி மார்க்கெட்டுகளுக்கு தற்போது தினமும் சுமார் 50 டன் வரையில் காய்கறிகள் வரத்து உள்ளது.
வழக்கத்தைவிட வரத்து அதிகமாக இருந்தாலும், கடந்த மாதத்தைவிட ஒவ்வொரு காய்கறிகளின் விலை 30 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதில், தக்காளி, கத்தரிக்காய், வெண்டை, பச்சை மிளகாய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. இந்நிலை இன்னும் ஒரு வாரத்துக்கு நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.