முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேலமுறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ‘அரசு என்பது நம் அனைவரின் நிதி பங்களிப்போடு நடத்தப்படுவது; இதன் பயனாக மாணவர்கள் இன்று அரசு கல்லூரியில் கல்வி கற்கும் நிலை உள்ளது’ என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஹெக்டே குறிப்பிட்டார்.
அவரது கருத்தை கேட்க உடனே குறுக்கிட்ட நீதிபதி குப்தா, ‘நம் நாட்டில் வெறும் 4 % பேர் மட்டுமே
வருமான வரி
செலுத்துகிறார்கள். எனவே அரசு என்பது அனைவரின் நிதி பங்களிப்பில் நடத்தப்படுகிறது என்று சொல்ல முடியாது என எதிர் கருத்து தெரிவித்தார்.
வரி செலுத்தோவோர் குறித்த நீதிபதியின் இந்த கருத்து, நாடு முழுவதும் தற்போது பேசுப்பொருள் ஆகி உள்ளது. நீதிபதியின் இக்கருத்தை விமர்சித்து சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் கருத்துகளில் சில:
‘நாட்டில் அனைத்து குடிமக்களும் அவரவர் நிலைக்கேற்ப வரி செலுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள். 5 ரூபாய்க்கு பிஸ்கட் வாங்கும் ஒரு கூலி தொழிலாளி கூடஒரு ரிக் 18% அதாவது 90 காசுகளை வரியாக செலுத்துகிறார். இதனை நீதிபதி குப்தா ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என தெரியவில்லை. GST மூலம் இந்திய மக்கள் அனைவரும் மத்திய, மாநில அரசுகளுக்கு மறைமுக வரி செலுத்தி கொண்டுதான் உள்ளனர்’
‘ஜிஎஸ்டி, , தொழில் வரி, சுங்க வரி, சொத்து வரி, சாலை வரி, முத்திரை வரி, செஸ் என பல்வேறு விதமான வரிகளை மத்திய, மாநி நாட்டு மக்கள் செலுத்தி வருகின்றனர். இவற்றை பற்றியெல்லாம் நீதிபதி அறிந்திருக்க வேண்டும்’ என்பன போன்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அதேசமயம், ‘ஜிஎஸ்டி உள்ளிட்ட மறைமுக வரி என்பது தனிநபர் ஒவ்வொருவரின் நுகர்வு அடிப்படையில் மாறப்பட கூடியது. எனவே அதனை சம பங்களிப்பாக கருத முடியாது ஆனால் வருமான வரி என்பது கட்டாயம். இதனை நாட்டில் ஒட்டுமொத்தமாக 4% வரையிலான பணியாளர்கள் மட்டுமே செலுத்துகிறார்கள் என்பதால் நீதிபதி குப்தாவின் இக்கருத்து சரியானதே’ என்றும் அவருக்கு ஆதரவு குரல்களும் ஒலித்து வருகின்றன.