பீகாரில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பா.ஜ.க-வுடன் இணைந்து முதல்வராக ஆட்சி செய்துவந்த ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், திடீரென அந்தக் கூட்டணியிலிருந்து விலகி, எதிர்க்கட்சியாக விளங்கிய மகாபந்தன் கூட்டணியுடன் சேர்ந்து மீண்டும் முதல்வரானார். இது பா.ஜ.க-வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தவே, அடுத்ததாக 2024 மக்களவைத் தேர்தலில் மோடிக்கெதிராக எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் பதவிக்கு நிதிஷ் குமார் போட்டியிடப்போகிறார் எனச் செய்திகள் வெளிவந்தன. அதுபோன்ற செய்திகளுக்கேற்றவாறே, நிதிஷ் குமாரும் தொடர்ச்சியாக எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்துவந்தார்.
நேற்றுகூட காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். இந்த நிலையில், நிதிஷ் குமார் மீண்டும் அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை டெல்லியில் இன்று நேரில் சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிதிஷ் குமாரிடம், `2024-ல் மோடிக்கெதிராக பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் விதமாகவே எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகிறீர்களா?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டிருக்கிறது.
அதற்குப் பதிலளித்த நிதிஷ் குமார், “நான் அதற்கு உரிமை கோருபவனுமில்லை, எனக்கு அத்தகைய ஆசையுமில்லை. நாங்கள் ஒன்றாக இருக்கிறோம், அதனால்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். என்னுடைய சிறுவயதிலிருந்தே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் எனக்கு நீண்டகால தொடர்பிருக்கிறது. டெல்லிக்கு நான் வரும்போதெல்லாம் இந்த அலுவலகத்துக்கு வருவேன். எங்களுடைய முழு நோக்கமென்பது, அனைத்து இடதுசாரி கட்சிகள், பல்வேறு மாநிலங்களிருக்கும் பிராந்திய கட்சிகள் மற்றும் காங்கிரஸை ஒன்றிணைப்பதுதான். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் அது பெரிய விஷயமாக இருக்கும்” என்று கூறினார்.
மேலும் நிதிஷ் குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் இன்று சந்திக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.