டெல்லி போலீஸார் இந்தியாவின் மிகப்பெரிய கார் திருடனான அனில் சௌகான்(52) என்பவரைக் கைது செய்துள்ளனர். இவர் டெல்லி, மும்பை என வடகிழக்கு பகுதிகளில் சொத்துக்கள் சேர்த்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார்.
டெல்லி சிறப்புக் காவல்துறையினர் இவரை தேஷ் பண்டு குப்தா சாலையில் வைத்து கைது செய்துள்ளனர். இவர் கடந்த 27 ஆண்டுகளில் 5,000 கார்களைத் திருடிய மிகப்பெரிய திருடன் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
போலீஸ் தரப்பில் இதுகுறித்து கூறுகையில், “அனில் 1995 காலக்கட்டத்தில் டெல்லியின் கான்பூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருந்துள்ளார். அந்த காலகட்டங்களில் மாருதி 800 கார்களை அதிகமாகத் திருடியுள்ளார். அனில், கார்களை இந்தியாவின் பல பாகங்களிலும் இருந்து திருடி, நேபால், ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் விற்றுள்ளார். கார் திருட்டின் போது பல கார் உரிமையாளர்களை கொல்லவும் செய்திருக்கிறார்.
தற்போது ஆயுதக் கடத்தல் தொழிலிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார். உ. பி-யிலிருந்து ஆயுதங்களைக் கடத்தி, அதை வடகிழக்கு பகுதிகளில் உள்ள தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு விற்றிருக்கிறார்”, எனவும் போலீஸார் கூறியுள்ளனர்.
தற்போது அஸ்ஸாமுக்கு குடிபெயர்ந்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார். விசாரணை நிறுவனம் ஒன்றும் இவர் மீது பணமோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது. இவர் மீது 180 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். 2015-ல் சிறையில் அடைக்கப்பட்டு, 5 ஆண்டுகள் தண்டனைக் காலம் முடிந்து 2020-ல் வெளியே வந்துள்ளார்.
ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்த அனிலுக்கு 3 மனைவிகளும், 7 பிள்ளைகளும் உள்ளனர். நிறைய அரசியல் புள்ளிகளின் தொடர்பும் இவருக்கு இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.