கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பெய்த கனமழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில், கடந்த மூன்று நாட்களாக, கனமழை கொட்டி தீர்த்தது. வளர்ந்த நகரங்கள் பட்டியலில் உள்ள பெங்களூரில், முறையாக திட்டமிடப்படாததால், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் வழிந்தோடுகிறது.
மேலும், நகரில் வெள்ள நீர் வடியாததால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அலுவலகங்கள் திறக்கப்பட்டிருந்தாலும் ஊழியர்கள், டிராக்டர் மூலம் பணிக்கு சென்றனர். பெங்களூரு நகரில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. மாண்டியாவில் உள்ள குடிநீரேற்றும் இடத்தில் வெள்ள நீர் சூழ்ந்து உள்ளதால், குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
ஐடி நிறுவனங்கள் அமைந்த பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்து உள்ளதால், அங்கு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. 500 மழைநீர் வடிகால்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதை மாநகராட்சி அதிகாரிகள் கண்டறிந்து உள்ளனர். இதனால், தான் பெங்களூரு வெள்ளத்தில் மிதப்பது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே, பெங்களூரின் வைட் பீல்ட் பகுதியில் வெள்ளத்தில் இருசக்கர தள்ளிச்சென்ற அகிலா (23) என்ற இளம்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். வெள்ளத்தில் நிலை தடுமாறியதால், அருகில் இருந்த மின்கம்பத்தை பிடித்துள்ளார். அதில், மின்சாரம் பாய்ந்ததால், அகிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.