இனி மொபைல் மூலமா எந்த விதமான வேலை செஞ்சாலும் பொறுப்போட நடந்துக்கணும். இல்லாட்டி பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். என்ன இவர் திடீர்னு மிரட்டுறாரு என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் மேலே இருக்கும் வார்த்தைகளை நான் சொல்லவில்லை, சொன்னது மத்திய அரசாங்கம். அப்படி என்ன அவர்கள் சொன்னார்கள். ஏன்? என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
விரைவில் மத்திய அரசாங்கம் தரவுகள் பாதுகாப்பு மசோதா ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் தான் யூட்யூப் போன்ற தளங்களும் மத்திய தகவல் தொழிநுட்பத்துறை சட்டங்களின் கீழ் வரும் என்றும், அதில் பதிவிடப்படும் விஷயங்களும் பொறுப்போடு இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து சமீப காலமாக சட்ட விதிகளை மீறும் பல யூடியூப் சேனல்களை முடக்கி வருகிறது மத்திய அரசு.
இந்நிலையில் புதிய மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கான வேலையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இந்த மசோதாவின்படி, அனைத்து விதமான சமூக வலைத்தளங்கள் பயன்பாடு மற்றும் நிறுவனங்கள் சேகரிக்கும் தரவுகளை கையாளுதல் போன்றவற்றில் ஒரு ஒழுங்குமுறையை கொண்டு வருவதற்கான அம்சங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.
இது குறித்து பேசியுள்ள மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஸ்ரீ அஸ்வினி வைஷ்ணவ் கூறும்போது, டிஜிட்டல் உலகில் தரவுகள் கையாள்வது துவங்கி பயன்பாடுகள் வரை அனைவரும் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். அதை ஒழுங்கப்படுத்துவதற்கான சட்ட மசோதாவை வெகு விரைவில் அறிமுகப்படுத்த போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தவறான செய்திகளை பரப்புவது, இணைய வழி குற்றங்களை தடுப்பது போன்ற பல்வேறு ஆன்லைன் மோசடிகளை தடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வந்த தரவுகளின்படி இந்த ஆண்டு மட்டும் இது வரை இல்லாத அளவிற்கு சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது. எனவே அமைச்சர் சொன்னது போல் பொறுப்புள்ள இணைய உலகை கட்டமைக்க இந்த புதிய சட்டம் உதவலாம்.