ஆஹா-வில் படமாகும் ஜெயமோகன் கதை; டர்மெரிக் மீடியா தயாரிக்கும் புதிய படத்தின் அப்டேட்!

20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தயாரிப்பு நிறுவனமான டர்மெரிக் மீடியா மற்றும் பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் ஓடிடி தளமான ஆஹா தமிழ் இணைந்து, இன்னும் பெயரிடப்படாத ஒரு புதிய திரைப்படத்தைத் தயாரிக்கவிருப்பதாக இன்று அறிவித்துள்ளார்கள்.

இந்தத் திரைப்படம் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘வெண்கடல்’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘கைதிகள்’ சிறுகதையைத் தழுவி உருவாக்கப்படுகிறது. ரஃபீக் இஸ்மாயில் இந்தப் படத்தை இயக்குகிறார். சிறந்த இலக்கியப் படைப்புகள் வெற்றிகரமான திரைப்படங்களாகவும், ரசனைக்கும் ஏற்றவாறு அமைய வேண்டும் என்பதற்காக ஜெயமோகன் அவர்களின் மூலக்கதைக்கு ஈடுகொடுக்கக்கூடிய மிகச்சிறந்த திரைக்கதையாக வடிவமைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் தலைப்பு, நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை டர்மெரிக் மீடியா அனிதா மகேந்திரன் தயாரிக்கிறார். ஆஹா ஓ.டி.டி. தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஜித் தாக்கூர் கூறியதாவது, “மிக நேர்த்தியான கதை அம்சம் கொண்ட திரைப்படங்கள், உறுதியாக பார்வையாளர்களின் உள்ளத்தை சென்றடையும். இக்கோட்பாடை உண்மையாக்கும் வகையில் செயல்பட்டுவரும் தயாரிப்பு நிறுவனமான டர்மெரிக் மீடியா உடன் கரம் கோர்ப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

மேலும் சிறப்புமிக்க தனித்தன்மை வாய்ந்த திரைப்படங்கள் தயாரிப்பதை தங்கள் பாணியாக கொண்ட டர்மெரிக் மீடியாவும், நாங்களும் சேர்ந்தது, மிகச்சிறந்த எழுத்தாளரான ஜெயமோகன் அவர்களுடைய படைப்பை தழுவிய திரைப்படத்தை, ஆஹா ஓடிடி ஒரிஜினலில் வெளியிட நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இத்திரைப்படம் ஆஹா ஓடிடி நேயர்களுக்கு ஒரு மிக தரமான படமாக அமையும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என தெரிவித்தார்.

தயாரிப்பாளர் அனிதா மகேந்திரன் கூறியதாவது, “அனைத்து தரப்பு மக்களை மகிழ்விக்கும் வகையில் பல புதிய நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ்கள் மற்றும் படங்களை வழங்கும் ஆஹா தமிழ் ஓடிடி, 2 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டு முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக உள்ளது. அந்நிறுவனத்தின் அமைப்பாளரும் தெலுங்கு திரைப்படத்துறை மூத்த தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். டர்மெரிக் மீடியா படைப்பூக்கத்தை தரமான, வெற்றிகரமான திரைப்படமாக மாற்ற முடியுமென்பதில் சமரசமற்ற நம்பிக்கை கொண்டிருக்கிறது. இந்தப் படமும் ரசிகர்களை மகிழ்விக்கும் படமாக அமையுமென்பதில் உறுதியாக இருக்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.