புதுடில்லி, ‘கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீதான முழுமையான விசாரணை வரும் 13 முதல் துவங்கும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில், 2019ல் அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 2019 ஜனவரியில் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இந்த சட்ட திருத்தம் நிறைவேறியது. அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்த பின் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில், இந்த மனுக்கள் மீதான முதற்கட்ட விசாரணை நேற்று துவங்கியது.அப்போது, மனுதாரர்கள் தரப்பிலான முறையீடுகளை வாதிட மொத்தமாக 18 மணி நேரம் தேவைப்படுவதாக அவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கோரினர்.இதை ஏற்ற நீதிபதிகள், அனைத்து தரப்பும் வாதிட தேவையான நேரம் அளிக்கப்படும் எனக் கூறி, முழுமையான விசாரணை வரும் 13ல் துவங்கும் என உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement