சென்னை: “ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் வெற்றிபெற வாழ்த்துகள்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்கிறார். கன்னியாகுமரியின் காந்தி மண்டபம் நுழைவுவாயிலில் இருந்து தொடங்கும் இந்த நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை வழங்கி தொடங்கி வைத்தார். இதற்காக காந்தி மண்டபம் வந்த முதல்வர் ஸ்டாலின், அங்கு நடைபெற்ற பிரார்த்தனையில் ராகுல் காந்தியுடன் அமர்ந்து பங்கேற்றார். முன்னதாக, ராகுல் காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி, ஆரத்தழுவி தனது வாழ்த்துகளை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “அன்புச் சகோதரர் ராகுல் காந்தி, இந்தியாவின் ஆன்மாவை மீட்டெடுக்க, நமது குடியரசின் உயர் விழுமியங்களை உயர்த்திப் பிடிக்க, நாட்டு மக்களை அன்பால் ஒன்றிணைப்பதற்கான பயணத்தை இன்று தொடங்கியிருக்கிறார். சமத்துவத்தின் சின்னமான வள்ளுவர் சிலை உயர்ந்து நிற்கும் குமரிமுனையைக் காட்டிலும் இந்த இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கப் பொருத்தமான இடம் வேறு இருக்கமுடியாது.
மதத்தால் பிளவுபடுத்தலும்,கேடு விளைவிக்கும் வெறுப்புப் பரப்புரைகளும் மக்களின் மனங்களை மூழ்கடித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவை ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் அரும்பணியை நாட்டின் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் பேரியக்கம் முன்னெடுத்துள்ளது. பெருமைமிகு நமது குடியரசை மீண்டும் கண்டெடுக்கும் தனது நோக்கத்தில் “இந்திய ஒற்றுமைப் பயணம்” வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.