இந்த தலைமுறையில் இந்த படம் வருவது பெருமை : பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிலைர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாய் நடந்தது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். முன்னதாக இந்த விழாவிற்கு திராளான திரையுலகினர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

கார்த்தி
முன்னதாக விழாவிற்கு வந்த கார்த்தி செய்தியாளர்களிடம் பேசும்போது : ‛‛இந்த தலைமுறையில் இந்த படம் வருவது பெருமையாக உள்ளது. பல ஆண்டுகள் தமிழ் மக்கள் எதிர்பார்த்த ஒரு படம். இதில் நானும் அங்கம் வகித்து இருப்பது எனக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன். படத்தில் உண்மையும், கற்பனையும் கலந்த கதாபாத்திரங்கள் உள்ளன. இதை மணி சார் சிறப்பாக கையாண்டுள்ளார்'' என்றார்.

த்ரிஷா
நடிகை திரிஷா கூறுகையில், ‛‛இளவரசியாக நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை, கனவு. என் கனவை நனவாக்கிய மணிசாருக்கு நன்றி. ரஜினி, கமல் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என் வாழ்நாளில் நான் பங்குபெறும் பிரம்மாண்ட பட நிகழ்ச்சி இது. இந்த படத்திற்காக நிறைய உழைத்துள்ளோம். குறிப்பாக இந்த படத்தில் எனக்கு செந்தமிழ் மொழி பேசுவது கஷ்டமாக இருந்தது'' என்றார்.

ஐஸ்வர்யா ராய்
நடிகை ஐஸ்வர்யா ராய் கூறுகையில் : ‛‛பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. எங்களுடைய நெஞ்சுக்கு நெருக்கமான படம். உங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியையும், சிறந்த அனுபவத்தையும் தரும்'' என்றார்.

வரிவிலக்கு தாங்க
தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி பேசுகையில், ‛‛இந்த தருணத்தில் முதல்வருக்கு ஒரு வேண்டுகோள். பொன்னியின் செல்வன் மாதிரியான படங்கள் பன்ணுபவர்களுக்கு வரி விலக்கு கொடுக்க வேண்டும் என வேண்டுகிறேன்'' என்றார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இயக்குனர் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் 30 ஆண்டுகால திரைப் பயணத்தை கொண்டாடும் விதமாக அவர்கள் கூட்டணியில் வெளிவந்த பாடல்களைப் பட விழாவில் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.


அரபிக் கடலோரம் பாடிய யுவன் – சந்தோஷ்

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டில் பங்கேற்ற இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவரும் இணைந்து ரஹ்மானின் அரபிக் கடலோரம் பாடலை பாடினர். மேலும் டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து டிரம்ஸ் வாசித்தனர். தொடர்ந்து பேசிய யுவன் ஷங்கர் ராஜா, ‛‛ரஹ்மான் அவர்களின் இசை மற்றும் சவுண்ட் சிஸ்டம் தனித்துவமாக இருக்கும்'' என்றார்.

பார்த்திபன்
விழாவில் பேசிய பார்த்திபன் : ‛‛ரத்ன சுருக்கமாக யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் மணிரத்னம் மாதிரி சுருக்கமாக யாராலும் பேச முடியாது. தொழில்நுட்ப கலைஞர்களான மணிரத்ன சோழன், ரகுமான் தேவன் ஆகியோருக்கு பாராட்டுகள்'' என்றார்.

நாசர்
விழாவில் பேசிய நாசர் : 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட காவியம் இப்போது திரையில் வருகிறது. உங்களை போன்று நானும் இந்த படத்தை ஆவலாய் எதிர்பார்க்கிறேன். இந்த படத்தில் நடித்தது என்பதற்காக அல்ல. இந்த படத்தின் டிரைலரே பொன்னியின் செல்வன் முதல்பாகம் என்று சொல்வேன். பாகுபலி என்பது ஒரு ஊருல ஒரு ராஜா மாறியான கற்பனைக் கதை. ஆனால் பொன்னியின் செல்வன் அப்படியல்ல, சரித்திரம் சார்ந்த பின்னப்பட்ட கதை. அதனால் பாகுபலி படத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.'' என்றார்.

சித்தார்த்
நடிகர் சித்தார்த் பேசும்போது : வணக்கம் இது பொன்னியின் செல்வன். கல்கி அவர்களின் படைப்பு, மணிரத்னத்தின் கற்பனை, நம் எல்லோரின் நிஜம். இது நாங்கள் படித்த பள்ளிக்கூடம், கல்லூரி, பல்கலைக்கழகத்தின் கனவு. மணிரத்னம் அவர்களின் கனவு நிஜமாகி உள்ளது. பொன்னியின் செல்வன் என்கிற மிகப்பெரிய படைப்பு திரையில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான முயற்சியை வேறு யாரும் எடுத்திருக்கமாட்டார்கள். பாரம்பரிய, கலாச்சாரம் உள்ளிட்ட கலந்த பெரிய படைப்பு இது. உங்களை போல நாங்களும் இந்த படத்தை காண ஆவலாய் உள்ளோம். இன்று இந்த விழாவில் நான் கலந்து கொண்டது எனது அதிர்ஷ்டம். சாரின் சிஷ்யனாக மட்டுமல்லாது ஒரு ரசிகனாக இந்த படத்தை காண ஆவலாய் உள்ளேன்'' என்றார்.

ஷங்கர்
விழாவில் இயக்குனர் ஷங்கர் பேசும்போது : இன்று எல்லோரும் பான் இந்தியா என்ற வார்த்தை பயன்படுத்துகிறார்கள். அதற்கான உண்மையான பான் இந்தியா இயக்குனர் மணிரத்னம் அவர்கள் தான். அவரின் கீதாஞ்சலி படத்தில் வரும் ஓ பிரியா பிரியா, தளபதியில் வரும் பாடல்கள் பிரமாண்டமாய் படமாக்கப்பட்டு இருக்கும். அவை தான் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது'' என்றவர், 'இந்தியன்-2' படத்தின் ஒரு செட்யூல் முடிந்தது. அடுத்து கமல் சாருடன் இந்த மாதம் 3வது வாரம் தொடங்குகிறது'' என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.