* இந்தியாவில் படிக்க வாய்ப்பில்லை
டெல்லி: உக்ரைனில் படித்த இந்திய மருத்துவ மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிப்பை தொடர தேசிய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. அவர்கள் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் படிப்பை தொடர முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யப் போரால் உக்ரைனில் படித்து வந்த இந்திய மருத்துவ மாணவர்கள், நாடு திரும்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இன்னும் இருநாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், சுமார் இருபதாயிரம் இந்திய மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிடக் கோரி மாணவர்களும், பெற்றோர்களும் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். இந்திய மருத்துவ கவுன்சில், ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி வந்தது. இந்நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘உக்ரைன் பல்கலைக்கழகங்களில் படித்த இந்திய மருத்துவ மாணவர்கள், வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தங்களது படிப்பை தொடரலாம். மாணவர்கள் நேரடியாக புதிய செமஸ்டரில் இணைந்து படிப்பைத் தொடரலாம்.
தற்போது படித்து வந்த பல்கலைக்கழகங்களே இதற்கான வசதிகளை மாணவர்களுக்கு செய்து தரும். மற்ற நாடுகளில் மருத்துவ படிப்பை படிக்கும் மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட உக்ரைன் பல்கலைக்கழகங்களே பட்டப்படிப்புக்கான சான்றிதழ் வழங்கும். ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்துடன் கலந்து ஆலோசித்த பின்னர், இதற்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் வழங்கி உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் தற்போதைய அறிவிப்பால், உக்ரைனில் மருத்துவ படிப்பை படித்த மாணவர்கள், இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பை தொடர முடியுமா? என்பது கேள்வியாக உள்ளது. இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘உக்ரைனில் மருத்துவ படிப்பை படித்த மாணவர்கள், இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். தற்போதைய அறிவிப்பானது, மாணவர்கள் படிப்பை தொடர்வதற்கான இடமாற்ற அறிவிப்பு என்றே கருதமுடியும்’ என்றனர்.