”உங்களது 10 எம்எல்ஏக்கள் எங்களுடன் பேசி வருகின்றனர்” – திமுகவுக்கு ஷாக் கொடுக்கும் இபிஎஸ்!

திமுகவின் 10 எம்.எல்.ஏ-க்கள் தங்களுடன் பேசி வருவதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்ல விழாவில் கலந்துகொண்ட பின் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு பதிலளித்த அவர், “திமுகவின் 10 எம்எல்ஏக்கள் எங்களோடு பேசி வருகின்றனர். மேயரை பின் வரிசையில் அமர வைத்தது தான் திராவிட மாடல். திமுக என்பது திராவிட மாடல் மட்டுமல்ல… கார்ப்பரேட் கட்சி, குடும்ப கட்சி. வெறும் எம்.எல்.ஏ-வாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், திட்டங்களை தொடங்கி வைத்து முன்னிலைப்படுத்தப்படுகிறார். உரிய மரியாதை அளிக்க வேண்டியவர்கள் பலர் அங்கு உள்ளனர். ஆனால் அதையெல்லாம் திமுகவில் எதிர்பார்க்க முடியாது” என்றார்.
பின் ராகுல் காந்தி வருகை குறித்தும், புதிய மசோதாக்கள், திட்டங்கள் குறித்தும் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்த அவர், “புதிய மின் மசோதா குறித்து முழுமையான தகவல்கள் கிடைக்கப்பட்ட பிறகு விவசாயிகளுக்கு பாதிப்பா என்பது குறித்த கருத்தை தெரிவிக்க முடியும். `ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த அறிவிப்பு வந்தால் வெற்றி வாய்ப்பு குறித்து தெரிவிக்கிறோம்” என்றார்.
DMK moves SC on disqualified MLAs case | Chennai News - Times of India
பின் அதிமுக உட்கட்சி பூசல் குறித்து விரிவாகப் பேசினார். “தமிழகத்தில் எத்தனை கட்சிகள் இருந்தாலும் பாசம் உள்ள கட்சி அதிமுக மட்டுமே. ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோரை வரவேற்பதாக தெரிவித்திருக்கிறார். அதிமுக என்பது தொண்டர்களால் ஆளப்படும் கட்சி. தொண்டர்கள் தான் இதை ஆட்சி செய்து வருகின்றனர். மற்றவர்களுக்கு இங்கு இடமில்லை. அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் வழக்கின் விசாரணை முடிவிலேயே அது குறித்து தெரியவரும். 
அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று தொடங்கப்பட்ட சிபிசிஐடி விசாரணை என்பது, காலம் தாழ்ந்து தொடங்கப்பட்ட விசாரணை. கட்சி தலைமையகத்தில் பொருட்கள் திருடு போனதாக புகார் அளித்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காவல்துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்த வேண்டும். இந்த ஆட்சியில் அது நடைபெறாது. நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொருட்கள் திருடு போனால் அதனை கண்டுபிடிப்பதற்கான காவல் துறை இல்லை. அதற்கான நடவடிக்கை எடுப்பதற்கான முதலமைச்சரும் இல்லை.
நீதிமன்றத்தை நாடியதால் தான் தற்போது அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற முதல் விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கு இதுவே சாட்சி” எனவும் கூறினார்.
“32 காலம் ஆட்சி செய்த கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கொள்ளை குறித்த புகாரிலேயே இந்த ஆட்சியில் விசாரணை முழுமையாக நடைபெறவில்லை என்றால், இந்த ஆட்சியின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்கு இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாத சூழல் நிலவுகிறது. ஏழை மக்கள் மலிவு விலையில் உணவைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் `அம்மா உணவகம்’. அதனை மூடியவர்களுக்கு அடுத்து வரும் தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்” என்றார்.
DMK stole Rs 500 crore in name of Pongal hampers: Palaniswami- The New  Indian Express
தொடர்ந்து மீனவர்கள் பிரச்னை, தடுப்பணை கட்டுவது குறித்து பேசுகையில், “கொசஸ்தலை ஆற்றில் புதிய தடுப்பணை கட்ட ஆந்திர அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கும் நிலையில் நமக்கு வர வேண்டிய நீரை தடுத்து நிறுத்துவது ஏற்புடையதல்ல. இதனை அண்டை மாநிலமான ஆந்திரா உணர வேண்டும். இந்தியா ஒரே நாடு. யாரும் பாதிக்கப்படக் கூடாது என்ற வகையில் ஆந்திர அரசு அணை கட்டுவதை நாம் தவிர்க்க வேண்டும். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவது என்பது காலம் காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அதிமுக ஆட்சியிலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மத்திய அரசின் உதவியோடு மீட்டுள்ளோம்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.