லூதியானா: அழுதுக் கொண்டிருந்த குழந்தையை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்த கொடூர தாயை பஞ்சாப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
தான் பெற்றெடுத்த குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதனை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல தாய் தயங்க மாட்டாள் என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம்.
இன்றைக்கு கூட மத்திய பிரதேசத்தில் புலியுடன் சண்டையிட்டு தனது குழந்தையை காப்பாற்றிய தாய் குறித்த செய்தி வெளிவந்து மெய்சிலிர்க்க வைத்தது. ஆனால், அதற்கு நேரெதிராக தனது குழந்தையை தானே தீ வைத்து எரித்த கொடூர தாய் பற்றி இங்கு காண்போம்.
கணவருடன் பிரச்சினை
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் உள்ள சுடானி கலான் கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபீந்தர் கவுர் (33). இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 3 குழந்தைகள் இருக்கின்றன. கணவர் மீது ரூபீந்தர் கவுர் அடிக்கடி சந்தேகப்பட்டு சண்டை போடுவார் எனக் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே எப்போதும் பிரச்சினை இருந்து வந்துள்ளது.
மன அழுத்தம்
இந்த சூழலில், ருபீந்தர் கவுருடன் இனி தன்னால் வாழ முடியாது எனக் கூறி அவரை அவரது தாயார் வீட்டுக்கு கணவர் அனுப்பி வைத்துவிட்டார். இதனால் கடந்த ஒரு வருடமாக தனது தாயார் வீட்டில்தான் குழந்தைகளுடன் ருபிந்தர் கவுர் இருந்து வந்துள்ளார். இதனிடையே, கடந்த சில வாரங்களாக மிகுந்த மன அழுத்தத்தில் ருபீந்தர் கவுர் இருந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி வீட்டில் உள்ளவர்கள் மீது அவர் கோபப்பட்டு வந்திருக்கிறார்.
குழந்தை மீது தீ வைப்பு
இந்நிலையில், இன்று அதிகாலை அவரது மூன்றாவது குழந்தையான ஹர்மான் (3) அழுதிருக்கிறான். ருபீந்தர் சிங் எவ்வளவு சமாதானப்படுத்தியும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. தொடர்ந்து ஹர்மான் அழுததால் ஆத்திரமடைந்த ருபீந்தர் கவுர், வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து குழந்தை மீது ஊற்றி தீ வைத்தார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி குழந்தை அழுது துடித்துள்ளது.
கைது நடவடிக்கை
குழந்தையின் அலறல் சத்ததை கேட்ட ருபீந்தர் கவுரின் பெற்றோர் அங்கு வந்து குழந்தையின் உடலில் இருந்த தீயை அணைத்தனர். பின்னர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, குழந்தைக்கு தீ வைத்ததாக ரூபீந்தர் கவுர் மீது அவரது பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். இதன்பேரில் ருபீந்தர் கவுரை போலீஸார் கைது செய்தனர்.