கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அம்மன்குளம் பகுதியில், அருகருகே இரண்டு கழிப்பிடங்கள் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்ட அந்த பொதுக்கழிப்பிடத்தில் கதவோ, தடுப்பு சுவரோ எதுவும் இல்லாமல் இரண்டு கழிப்பிடங்கள் அருகில் இடம் பெற்றிருந்தன.
அதே பொதுகழிப்பிடத்தில் அருகில் உள்ள கழிப்பறையில் கதவு வைக்கப்பட்டுள்ளது.
இது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. “இது காதல் ஜோடிகளுக்காக கட்டப்பட்டதா… கழிப்பறையாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? சங்கடமா இருக்காதா” என நெட்டிசன்கள் மீம்ஸ்களை போட்டு கலாய்த்து வந்தனர்.
எதிர்க்கட்சிகளும், “ஒரு கழிப்பறையைகூட உருப்படியாக கட்ட முடியவில்லை. இதுதான் திராவிட மாடலா?” என்று விமர்சித்து வருகின்றனர்.
இது குறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “12 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கழிவறை அது. திறந்தவெளி மலம் கழிக்கும் பகுதிகளில் பொதுகழிப்பறைகள் கட்டப்பட்டன. குழந்தைகளுக்காக தடுப்பு சுவர் இல்லாத கழிப்பறைகள் கட்டப்பட்டன.
இன்றைய காலகட்டத்தில் இது மக்களுக்கு பயனில்லை என்று புகார் வந்துள்ளது. எனவே, அதை புனரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்” என்றனர்.