கர்நாடக உணவுத் துறை அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பால் மரணம்: முதல்வர் பசவராஜ் இரங்கல்

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 61. அவரது மறைவு மாநிலத்திற்கு பெரிய இழப்பு என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்றிரவு (செவ்வாய் இரவு) டாலர்ஸ் காலனியில் உள்ள தனது வீட்டில் இருந்த அமைச்சர் உமேஷ் பட்டீல் நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். உடனே குடும்பத்தினர் அவரை ராமைய்யா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிர் பிரிந்தது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தீவிர மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறினர்.

உமேஷ் மறைவு குறித்து பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, “உமேஷ் கட்டி எனக்கு நெருங்கிய நண்பர். அவர் எனக்கு சகோதரர் போல் இருந்தார். அவருக்கு இதய நோய் இருப்பது தெரியும். ஆனால் அது அவரின் உயிரைப் பறிக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. மாநில வளர்ச்சிக்காக அவர் நிறைய நன்மைகள் செய்துள்ளார். பல்வேறு துறை அமைச்சராகவும் திறம்பட பணியாற்றியுள்ளார். அதிகம் பேசமாட்டார். அவர் ஒரு செயல்வீரர். அவரது மறைவு மாநிலத்திற்கு நிச்சயமாக பேரிழப்பு. அவர் விட்டுச்சென்ற வெற்றிடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. அவரது இறுதிச் சடங்கு முழு மாநில மரியாதையுடன் நடைபெறும். அவரது இறுதிச் சடங்கு பெலகாவியில் நடைபெறும். அங்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.