கவர்னர் அனுப்பிய அவதூறு நோட்டீஸ்: தாறுமாறாக கிழித்த ஆம் ஆத்மி எம்பி!

டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா அனுப்பிய அவதூறு நோட்டீசை, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கிழித்து எறிந்தார்.

டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கிறது.

முன்னாள் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் – ஆம் ஆத்மி அரசு இடையே கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு விவகாரங்களில் முரண்பாடு இருந்ததை அனைவரும் அறிவர். அவரது ராஜினாமாவைத் தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வினய் குமார் சக்சேனாவுக்கும், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும் இடையே முட்டல் மோதல் நிலவுகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழப்பு செய்யப்பட்ட போது, காதி மற்றும் கிராமப்புற தொழில் கமிஷன் தலைவராக இருந்த வினய் குமார் சக்சேனா, 1,400 கோடி ரூபாய் பணத்தை மாற்றி உள்ளார் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான, ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங், அடிஷி மற்றும் சவுரப் பரத்வாஜ் உள்ளிட்டோர் குற்றம் சாட்டினர்.

இதை அடுத்து, ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா அனுப்பி உள்ள நோட்டீசில், ‘சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி வெளியிட்டுள்ள அவதூறு குற்றச்சாட்டுகளை 48 மணி நேரத்துக்குள் நீக்கி விட்டு மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று, இந்த விவகாரம் குறித்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கூறியதாவது:

உண்மையை பேசுவதற்கு அரசியல் சாசனம் எனக்கு உரிமை கொடுத்துள்ளது. ராஜ்யசபா எம்பி என்ற முறையில், உண்மையை பேசுவதற்கு எனக்கு உரிமை உள்ளது. ஊழல்வாதி, திருடர் அனுப்பிய நோட்டீசை கண்டு பணிந்து போக மாட்டேன். இந்த நோட்டீசை கிழத்தெறிவேன். 10 முறை அனுப்பினாலும் கிழித்தெறிவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.