கோடா நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் ஷிவ் பால் சிங். இவர் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, கால்நடை தீவன வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல்வரும் ஆர்.ஜே.டி. தலைவருமான லாலு பிரசத்திற்கு, கால்நடை தீவன வழக்கில் குற்றாவளி எனத் தீர்ப்பளித்தவர். அதுமட்டுமல்லாமல், 1990களில் நடந்த ரூ. 3.13 கோடி கருவூல நிதி முறைகேடு வழக்கில், 2018-ம் ஆண்டு லாலுவுக்கு 14 ஆண்டு தண்டனையும், 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
ஏற்கெனவே திருமணமாகி இருந்த ஷிவ்பால் சிங்கின் மனைவி, இருபது ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் வசிக்கும், பா.ஜ.கவை சேர்ந்த பெண் வழக்கறிஞர் நிதின் திவாரிக்கும் ஷிவ்பால் சிங்கிற்கும் காதல் மலர்ந்துள்ளது. நிதின் திவாரி, தன் கணவர் இறந்த பின்னர் கோடா நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

ஷிவ்பால் சிங்குக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நுதன் திவாரிக்கும் ஒரு மகன் உள்ளார். ஷிவ்பால் சிங் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக கோடாவில் நீதிபதியாக இருந்துள்ளார். ஆனால், அவருக்கும் நுதன் திவாரிக்கும் இடையிலான காதல், சக வழக்கறிஞர்களுக்கு கூட தெரியவில்லை.
இந்த நிலையில், தங்களின் குழந்தைகளின் முழு ஆதரவுடன் திருமணம் நடைபெற்றதாக, இத்தம்பதி கூறியுள்ளனர். இவர்களின் இந்த கலப்பு திருமணத்திற்கு பல தரப்பினரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.