jராகுல் உருக்கம்:
‘நாட்டுக்காக தந்தையை இழந்தேன்.. ஆனால் நாட்டை இழக்கமாட்டேன்’ என்ற உருக்கமான பேச்சுடன் நாட்டின் தென்முனையாக கன்னியாகுமரியில் இன்று பாதயாத்திரையை தொடங்கி உள்ளார் ராகுல் காந்தி. குத்துயிரும், குலையுறுமாக கிடக்கும் காங்கிரஸை புத்துயிர் பெற செய்யும் நோக்கத்துடன், 150 நாட்களில் 3,500 கிலோமீட்டர் நடை பயணமாகவே கடந்து நாட்டின் வடமுனையான ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தை சென்றடைய உள்ளார் ராகுல்.
ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட 12 மாநிலங்களில் வழியே ஜம்மு- காஷ்மீர் நோக்கிய தமது இந்த பிரம்மாண்டமான நடை பயணத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களை சந்திக்கவுள்ள ராகுல், அவர்களிடம் மத்திய பாஜக அரசின் எட்டு ஆண்டு கால ஆட்சியில் நிகழ்ந்துவரும் அவலங்களாக
காங்கிரஸ்
கருதும் விஷயங்கள் குறித்து எடுத்துரைக்க உள்ளார்.
குமரியில் உரை:
அதற்கான முன்னோட்டமாக அமைந்திருந்தது அவர் இன்று நடை பயணம் தொடங்கிய கன்னியாகுமரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் ஆற்றிய உரை.
‘மதத்தாலும், மொழியாலும் நாட்டை பிளவுப்படுத்தி விடலாம் என்று பாஜக நினைக்கிறது. ஆனால் இதை பாஜகவால் ஒருபோதும் செய்ய முடியாது. இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு நாட்டில் இன்று பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாட்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.
துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி சுரங்கங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர்களிடம் உள்ளன. அவர்கள் இல்லையேல் மோடி இல்லை.
பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்டவை எல்லாம் பெரும் தொழிலதிபர்களின் நலனுக்காக அமல்படுத்தப்பட்டன. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மோடி ஆட்சியில் செயலிழந்துள்ளன’ என்று இவ்வாறாக குமரியில் ராகுல் ஆற்றிய உரையில் பெரும்பாலான அம்சங்கள் ஏற்கெனவே பலமுறை அவர் சொல்லி நாட்டு மக்கள் கேட்டவைதான்.
எடுபடாத பிரசாரம்:
அதாவது 2019 நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பிருந்தே ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் பல தருணங்களில் இந்த விஷயங்கள் குறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து எடுத்துரைத்து கொண்டுதான் வருகின்றனர். ஆனால் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சித் தலைவர்களின் குற்றச்சாட்டுகள் மோடி எனும் ஒற்றை மனிதனின் முன்பு தவிடுப்பொடி ஆனதையே 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் உணர்த்தின.
பிரசார உத்தியில் மாற்றம் தேவை:
பாஜக மீதான ராகுலின் குற்றச்சாட்டுகளில் நியாயம் இருப்பதாக சொல்லப்பட்டாலும் நாட்டு மக்கள் அவற்றை ஏற்க தயாராக இல்லை என்பதையே அந்த தேர்தல் முடிவுகள் காட்டின. எனவே 2024 நாடாளுமன்ற் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு ராகுல் இன்று தொடங்கியுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரையில் தனது பிரசார உத்தியை அவர் மாற்றியே ஆக வேண்டும் அவசியம் உள்ளது.
1. உதாரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பேசும்போது அது வெறும் பிரசாரமாக மட்டும் இல்லாமல், தெலங்கானாவில் அண்மையில் சமையல் கேஸ் சிலிண்டர்களில், பிரதமர் மோடி படத்துடன் அதன் விலை 1,150 ரூபாய் என அச்சிடப்பட்ட நோட்டீஸ் ஒட்டப்பட்டு, அவை வாடிக்கையாளர்களுக்கு விிநியோகம் செய்யப்பட்டபோது, அது ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தை ஈர்த்தது. அதே போன்று பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை பொதுமக்களின் மனதில் பதியும்படி ராகுல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் அரசியல் ஆலோசகர்கள்.
2. மோடியின் நண்பர்கள் என ராகுல் அவ்வப்போது குறிப்பிடும் தொழிலதிபர்கள் மூலம் பாஜகவுக்கு கிடைத்துவரும் கட்சி நன்கொடை குறித்தும், அதற்கு பிரதிபலனாக மத்தியிலும், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் அரசின் பல்வேறு திட்டங்கள் பெருமுதலாளிகளுக்கு எவ்வாறு தாரைவார்க்கப்படுகின்றன என்பது குறித்து வெறும் மேடை பேச்சாக இல்லாமல், உரிய ஆதாரங்களுடன் பொதுமக்கள் மத்தியில் காங்கிரஸ் எடுத்துரைக்க வேண்டும் என்கின்றனர் அவர்கள்.
3. மோடியின் வெளிநாட்டு பயணங்கள், சர்வதேச சந்தையில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டுவரும் இந்திய ரூபாயின் மதிப்பு, நாட்டில் அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை, சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் சந்தித்துவரும் நெருக்கடி, பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆட்சிபுரியும் மாநிலங்களில் ஆளுநர்களை கொண்டு பாஜக அளித்துவரும் நெருக்கடி என்ற பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆதாரப்பூர்வமாகவும், ஆணித்தரமாகவும் நாட்டு மக்களிடம் ராகுல் எடுத்துரைப்பதில்தான் அவரது மெகா நடை பயணத்தின் வெற்றி அடங்கி உள்ளது.