கூடலூர் : கேரளாவில் ஓணம் பண்டிகை ஜாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுகிறது. மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்க மாதத்தில், பருவ மழைக்காலம் முடிந்ததும் கொண்டாடப்படும் ஓணத்தை அறுவடைத்திருநாள் என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி சித்திரை, சோதி, விசாகம், அனிஷம், திரிக்கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம், திருவேணம் என 10 நாட்கள் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டின் ஓணம் பண்டிகை கடந்த 29.08.22 அன்று அத்தம் நட்சத்திரத்தில் தொடங்கி நாளை (செப். 8) திருவோணத்தோடு முடிவடைகிறது. திருவோண நாளன்று ஓண சத்யா என்ற 64 வகையான உணவு தயாரிக்கப்படுகிறது. கடுவாக்களி (புலி) நடனமும், கயிறு இழுத்தல், களரி போன்ற விளையாட்டுக்கள் ஓணத்தின் சிறப்பாகும்.
ஓணம் பண்டிகை மகாபலி மன்னனுக்காக கொண்டாட்டப்படுவதாக கேரள மக்கள் வழிவழியாக நம்புகின்றனர். கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்த மகாபலி மன்னன் தான தர்மங்களில் சிறந்து விளங்கினார். இவரை சோதிக்க நினைத்த திருமால், மகாபலி வேள்வி செய்யும் போது வாமனனாக (குள்ள உருவில்) வந்து தனக்கு மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் எடுத்துக்கொள்ள சொன்னார். முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் ஆகாயத்தையும் அளந்த திருமாலுக்கு மூன்றாம் அடிக்கு இடமில்லாததால், திருமாலின் பாதத்தில் சிரம் தாழ்த்தினார் மகாபலி. அவருக்கு முக்தி கொடுப்பதற்காக மகாபலியின் தலையில் கால்வைத்து பாதாள உலகுக்கு தள்ளினார் திருமால்.
நாட்டு மக்கள் தன்மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பதால் ஆண்டுக்கு ஒருமுறை தன் நாட்டு மக்களை கண்டு மகிழ திருமாலிடம் வேண்டினார் மகாபலி. அதன்படி ஒவ்வொரு திருவோண நாள் அன்றும் மகாபலி பாதாள உலகிலிருந்து பூலோகத்திற்கு வருவதோடு தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள். இதை நினைவு கூர்ந்து ஓணத்தின் போது ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அத்தப்பூ கோலமிட்டு, கும்மிப்பாட்டோடு மகாபலியை மக்கள் வரவேற்கின்றனர்.